

இன்று உலக மக்கள்தொகை நாள். இன்றைய தேதியில் உலக மக்கள் தொகை 800 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு மனிதரின் வாழ்வாதாரத்துக்கு இயற்கை வளம் அளவுக்கு அதிகமாகச் சூறையாடப்படுகிறது.
அதேநேரத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எளிமையாகச் சொல்வதானால் ஒரு மனிதர் உயிர் வாழ அடிப்படைத் தேவை உணவு, உடை, இடம் அப்படித்தானே! இந்த பூமியும் அதில் உள்ள நிலமும் வளமும் ஒன்றுதான்.
ஆனால், மக்களின் எண்ணிக்கை மட்டும் மளமளவென அதிகரித்தால் எப்படி கையிருப்பில் இருக்கக்கூடிய வளங்களை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முடியும்? அதற்கு நான் என்ன செய்ய என நீங்கள் கேட்கலாம். சிறு துளி பெரு வெள்ளம். அதனால் சின்ன சின்ன விஷயத்திலிருந்து தொடங்குவோம்.
மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் அதிகம் பயன்படுத்துவது காகிதம். ஒரு கிலோ காகிதத்துக்கு 17 மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. மரங்கள் வெட்டப்பட்டால் மழை பொய்த்துப்போகும், காற்று மாசுபாடு அதிகரிக்கும், மண்ணரிப்பு ஏற்படும், வேளாண்மை சீரழியும் மொத்தத்தில் பூமி வாழத் தகுதியற்றதாக மாறிப்போகும்.
ஆகையால் உங்கள் நோட்டுப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு காகிதத்தில் எழுதும்போதும் இதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் மாணவிகள் இப்போதிலிருந்தே விழிப்புணர்வு பெற வேண்டியிருக்கிறது. இயற்கையைப் போன்று படைக்கும் சக்தி மிக்கவள் பெண்.
அத்தகையஒவ்வொரு பெண்ணும் குடும்பக்கட்டுப்பாடு தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை, பாலின சமத்துவம் கோரும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒரு புறம் இயற்கையைப் பாதுகாப்பதில் மறுபுறம் மக்கள்தொகை பெருக்கத்தை மட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புள்ளது.