

தமிழகத்தில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்து, உயர்கல்வித் துறையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதன் மூலம் மேலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பள்ளிப் படிப்பைத் தாண்டி உயர்கல்வி பெற்று உயர முடியும். உயர்கல்வியினை அனைவரும் பெறும் வகையிலும், சமத்துவம் மற்றும் சமூகநீதிக்கு உட்பட்டு அனைத்துப் பிரிவினரும் கல்வி பெற்று வளர்ச்சி அடையும் வகையிலும் தமிழகத்தில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முதல் தலைமுறை பட்டதாரி சலுகைகள், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட கல்வி சார்ந்த நலத்திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதனால் ஏற்கெனவே அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
இது நிச்சயமாக மாநிலத்துக்கான பெருமையே. இருப்பினும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனில் பிற தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் சற்றே பின்தங்கியிருப்பது கவலைக்குரியது. அதேபோன்று கல்லூரியில் படித்து பட்டம் பெற்றிருந்தாலும் அதற்குரிய திறன்களில் போதாமை நிலவுவதைத் தொடர்ந்து பார்க்கிறோம்.
இந்நிலையில் பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் தாங்கள் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் என்ன, எப்படி படிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும்.
அதிலும் முதல்தலைமுறை பட்டதாரியாக உருவெடுக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் பள்ளி மாண்வர்களே! உங்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு உங்களின் முந்தைய தலைமுறையினருக்கு நிறைவேறாத கனவு என்பதை முதலில் உணருங்கள். பள்ளியைத் தாண்டி உயர பறக்க திட்டமிடுங்கள்!