

தமிழகத்தின் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்களை திரையிடும் முடிவை அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் உலகத்தை புதிய பார்வையில் காணவும், வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பலருக்கு ஆச்சரியமும் சிலருக்கு அதிர்ச்சியும் கூட அளிக்கலாம். ஏனெனில் மாணவர்களை, இளைஞர்களை சீரழிப்பதில் மிகப் பெரிய பங்கு மோசமான சினிமாவுக்கு இருந்துவந்துள்ளது. அதற்காக சினிமா பார்க்கக்கூடாது என்று மட்டும் அறிவுறுத்தி பயனில்லை.
பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலை இன்றில்லை. அப்போது தொலைக்காட்சிப் பெட்டியும் திரையரங்குகளும் மட்டுமே இருந்தன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சிறுவர்கள் சினிமா பார்ப்பதை பெரியவர்களால் தடுக்க முடியவில்லை. சினிமாவை தாண்டி, வெப் சீரிஸ், யூடியூப் காணொலிகள் என காட்சி ஊடகம் விஸ்வரூபம் எடுத்து நம்முடைய அன்றாடத்தின் பெரும்பகுதியை ஆக்கரமித்துக் கொண்டுவிட்டது.
இந்நிலையில் முள்ளை முள்ளால் எடுப்பதுபோல மோசமான சினிமாவுக்கு மாற்றாக நல்ல திரைப்படங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது வரவேற்புக்குரியது.
காட்சி ஊடகம் என்பது அதிசக்தி வாய்ந்த வடிவம். இதன் மூலம் புதிய கதைகள், புதுப்புது நிலப்பரப்புகள், பல்வேறு பண்பாடுகள், மக்களின் விதவிதமான வாழ்க்கை முறைகள், நற்சிந்தனைகளை வளரிளம் பருவத்தினர் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும்.
அப்படி சரியான முறையில் செய்தால் மாணவர்களின் ஆளுமையில் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை நிச்சயம் உண்டுபண்ண முடியும். ஒரே வேண்டுகோள்...வீடு, திரையரங்குபோல படம் பார்த்து முடித்தவுடன் எழுந்து கலைந்து சென்றுவிடாதீர்கள் மாணவர்களே! கூடி அமர்ந்து கலந்துரையாடுங்கள்!