

தமிழக பள்ளிக் கல்வித்துறையால் ‘மெட்டா கல்வித் திட்டம்’, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இரண்டு மாநகராட்சி பள்ளிகள் மற்றும் மூன்று அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இது அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் எனலாம். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டால் கல்வியின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இது உருவெடுக்கும்.
இதன் மூலம் கற்றல்-கற்பித்தலை கொண்டாட்டமாக மாற்றலாம். ஏனென்றால் எப்பேர்ப்பட்ட கடினமான பாடத்தையும் காட்சி வடிவில் படிக்கத் தொடங்கினால் அது சுவாரசியமாகிவிடுமே! நாம் வாழ்ந்துகொண்டிருப்பது தொழிற்புரட்சி 4.0 காலத்தில். இதில் உலகம் கண்டிருக்கும் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்று மெட்டாவெர்ஸ்.
இதன் மூலம் ராக்கெட்டுகள், சூரியக் குடும்பம், பால்வெளி போன்ற பல்வேறு விஷயங்களை புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட படத்தைப் பார்த்து மட்டும் நீங்கள் கற்கப் போவதில்லை. முப்பரிமாணத்தில் உங்கள் வகுப்பறையே பால்வெளியாக மாறும். அதில் கோள்களும் நட்சத்திரங்களும் சுழலும். கற்பனை செய்து பாருங்கள், அட்டகாசமாக இருக்கிறதல்லவா!
அதே நேரத்தில் இதைச் சிறப்பாகச் செயல்படுத்தும் ஆற்றலும் பொறுப்பும் ஆசிரியர்களிடம்தான் உள்ளது. அதற்கு முதலில் அரசு ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும்.
படைப்பாற்றலுடன் கூடிய கற்பித்தல் முறையை உருவாக்க இந்த புதிய தொழில்நுட்பத்தை முழு வீச்சில் பயன்படுத்தும் வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதன் மூலம் ஸ்டெம் படிப்புகள் என்றழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் துறைகளில் மாணவர்கள் கற்றுத் தேர்ந்து ஒளிர வேண்டும்.