

கரோனாவுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. குழந்தைகளும் குதூகலமாக கற்றலைத் தொடங்கிவிட்டீர்கள். தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் போனது. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தினாலும் ஏராளமான மாணவர்கள் சிரமப்பட்டதைக் காண முடிந்தது.
ஆசிரியர்களும் கற்பிக்க மெனக்கெட்டார்கள். கரோனா பாதிப்பு குறைந்ததால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. வழக்கமான பாட வேளைகளைத் தாண்டி ‘இல்லம் தேடி கல்வி’, ‘எண்ணும் எழுத்தும்’ போன்ற புதிய திட்டங்கள் வழியாக கல்வி வேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் கரோனா பரவல் தீவிரமடைந்துவருவதால், பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவது போன்ற கட்டுப்பாடுகளையும் பின்பற்றலாம். கற்றல் இடைவெளியைக் குறைக்க சமூக இடைவெளியும் தேவைதான்.
இப்போது கரோனாவால் பெரும் பாதிப்பு இல்லை என்பதால் சற்று எச்சரிக்கையோடு இருந்தால் மாணவர்களின் கல்வி இனி தடைபடாமல் தொடரலாம். கரோனா பெரும் பாதிப்பு ஏற்படுத்தியபோதே அரசு, ஆசிரியர், பெற்றோர் என எல்லோரும் சேர்ந்து சமாளித்துவிட்டோம்.
படிப்பதற்கு எத்தனையோ உத்திகளைக் கையாண்டோம். இப்போது ஆரோக்கியத்தை முன்னிறுத்த வேண்டியுள்ளது. கரோனாவை கருத்தில் கொண்டு கற்றலை வெற்றிகரமாக எதிர்கொள்வோம். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோருக்குக் கூட்டுப் பொறுப்பு உள்ளது.