

புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. மாணவச் செல்வங்கள் இன்று புதிதாய் என்ன கற்கலாம் என்ற உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்திருப்பீர்கள்.
உங்களுடைய வகுப்பறை பாடங்களோடு மேலும் புதியனவற்றை அறிமுகப்படுத்த நாங்களும் உடன் இருக்கிறோம். ‘நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?’ என்று யார் கேட்டாலும் உங்கள் மனதில் உள்ள ஆசையை தைரியமாக வெளிப்படுத்துங்கள். அது வெறுமனே கனவாக, ஆசையாக மட்டும் தேங்கிவிடாமல் திட்டமாக மாற்றுங்கள். அந்த திட்டத்தை எங்களிடம் நீங்கள் தாராளமாகப் பகிர்ந்துகொள்ளலாம்.
உங்கள் கனவை நிஜமாக்கும் அத்தனை வழிகளையும் தேடிக் கண்டுபிடித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மதிப்பெண் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குத் தனித்திறமைகளும் முக்கியம். ஆகையால் இரண்டையும் சமமாகக் கையாள பழகுங்கள். உடனடி இலக்கு, தொலைதூர இலக்கு, வாழ்நாள் இலக்கு என்பதாக வகுத்துக்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினால் காலம் வசப்படும்.
சிறந்த மாணவரே சிறந்த ஆசிரியராக உருவெடுக்க முடியும். ஆகையால், எதிர்கால தலைமுறையினரை வழிநடத்தும் பொறுப் பேற்றிருக்கும் ஆசிரியர்களே, உங்களுக்குள் இருக்கும் துருதுரு மாணவரை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருங்கள். புதிய சிந்தனைகளை மாணவர்களிடம் விதைத்துக் கொண்டிருங்கள்.
ஆசிரியரையும் மாணவரையும் பிணைக்கும் கண்ணியில் முக்கிய இடம் வகிக்கும் பெற்றோரே, கல்வியும் கல்விக்கூடமும் உங்கள் குழந்தைகளுக்குச் சுமை அல்ல சுகம் என்பதை உணர்த்திக் கொண்டே இருங்கள்.
புதிய கல்விப் பயணம் இனிதே தொடங்கட்டும்! வாழ்த்துகள்!