

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் இணைய வசதி மற்றும் ஸ்மார்ட் போன்கள் இல்லாத மாணவர்களைக் கருத்தில்கொண்டு தொலைக்காட்சி மூலம் ஆன்லைன் வகுப்புகளை ஒளிபரப்பும் புதிய முயற்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சத்ரபூர் வட்டாரக் கல்வி அலுவலர் அபினாஷ் சதாபதி கூறும்போது, ''இணையமும் ஸ்மார்ட் போனும் இல்லாத மாணவர்களின் டிஜிட்டல் இடைவெளியைப் போக்கும் வகையில், உள்ளூர் கேபிள் நெட்வொர்க் மூலம் ஆன்லைன் வகுப்புகளை ஒளிபரப்பும் முயற்சியில் இருக்கிறோம்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான வீடியோக்கள் அனைத்தும், கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் என்கோட் (encode) செய்யப்பட்டு, குறிப்பிட்ட கால அட்டவணைப்படி ஒளிபரப்பு செய்யப்படும். இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சியும் கேபிள் வசதியும் உள்ளதால், அதிக அளவிலான மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் சத்ராபூர், கல்லிக்கோடு மற்றும் கஞ்சம் ஆகிய 3 வட்டங்களில் உள்ள உள்ளூர் கேபிள் நிர்வாகத்திடமும் ஊராட்சித் தலைவர்களிடமும் பேசி இருக்கிறோம். இன்னும் 3 அல்லது 4 நாட்களில் வகுப்புகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும்.
கேபிள் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்துவது குறித்து ஏற்கெனவே அரசுக்கும் பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளோம். இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவர்’’ என்று அபினாஷ் சதாபதி தெரிவித்தார்.
இந்த வகுப்புகள் அனைத்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பேசி, அவர்களின் வசதிக்கேற்ற நேரத்தில் ஒளிபரப்பாகும். வகுப்புகளை யாரும் தவறவிட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒருமுறை மட்டுமல்லாமல் பலமுறை கற்பித்தல் வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.