

அன்பு மாணவர்களே,
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் உட்பட அனைவருக்கும் தன்னைச் சுற்றி ஒரு இறுக்கம் பற்றிக்கொண்டிருக்கும். காரணம்,நாம் தேர்வுக்கு மிக அருகில் இருப்பதாலே. தேர்வுகள் பல மாணவர்களின் கனவு, எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடியதாக இருக்கும் என்பதே நிதர்சனம். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும், படித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் விடுமுறை நாட்களை எண்ணி மனதின் ஒரு ஓரத்தில் சில எதிர்பார்ப்புகள் நிழலாடிக் கொண்டிருக்கும். தேர்வு முடியும் நாளைஅடிக்கடி நாட்காட்டியில் பார்க்க நேரிடும். ஆமாம் தானே?
தற்போது நம் மனமும், சூழலும் ஒரு நிலைபாட்டுக்கு வந்திருக்கும். தேர்வு தொடங்கியதும் பரபரப்பாக இருக்கும், நாட்கள்செல்வதே தெரியாது. நிறைவாக நீங்கள் தேர்வை செவ்வனே செய்து முடிப்பீர்கள். அதன்பிறகு உங்கள் எதிர்பார்ப்பில் துளிர்த்த விடுமுறைநாள் முழுமையாக வந்துவிடும். இதில் குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை இருக்கும். பெரும்பாலும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்திலேயே கழியும். இந்த வயதில் கொண்டாடாமல் வேறு எப்போது?
வெறுமனே கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் பயனுள்ளதாகவும் வழி செய்யவேண்டும். அதாவது விடுமுறையில் மீண்டும் புத்தகங்களை புரட்டிப்பாருங்கள். வரலாற்றுப் புத்தகத்தில் இருந்துசில சுவாரசியமான சிந்தனைகள் உருவாகலாம். அதில் இடம்பெற்றிருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள், காந்தி அருங்காட்சியகம், அறிவியல் அருங்காட்சியகம் போன்ற இடங்களுக்குச்ஒரு பயணம் செய்யுங்கள்.
பின்னாளில் வேறு வகுப்பில் உங்கள் அனுபவத்தைச் பகிர்ந்துகொள்கையில் இனிமையான தருணமாக இருக்கும். மீண்டும் பாடத்தில் படிக்கும்போது வேறுவிதமாக எதிரொலிக்கும். புதிய சிந்தனைகள் பிறக்கும். இருந்தாலும் அடுத்த கல்வியாண்டை தொடர்வதற்கு பல மாணவர்கள் வேலைக்குச் செல்லும் காட்சிகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக்கிடக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் விடுமுறையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.