

அன்பு மாணவர்களே,
மனிதனின் இயல்புகளில் சுவாரஸ்யமானது கோபமாகவோ, வருத்தமாகவோ, பதற்றமாகவோ இருந்தால் அதன் எதிர்வினையை உணவின் மீதுதான் காட்டுவதுதான்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் நேரத்துக்கு சாப்பிடாமல் மனதை அலையவிட்டுக் கொண்டிருப்போம், குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிகமாகவே நடக்கும்.தேர்வு குறித்த பயம், அதிக மதிப்பெண் பெறுவதற்கான அழுத்தம் என பல்வேறு வடிவங்களில் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவோம்.
ஒரு அறைக்குள் எறிந்த பந்துபோல் நான்கு சுவர்களிலும் அடித்துத் திரும்பி, முட்டி மோதி சுழன்று கொண்டிருப்போம். இதன் விளைவு முறையாக உணவு உட்கொள்ளாமல் படித்துக் கொண்டிருப்பது. நமது வயிறோ உணவு வேண்டி சத்தியாகிரகம் மேற்கொள்ளும். இதெல்லாம் தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்பதற்காகதான்.
உள்ளபடியே நமது உடல் ஆரோக்கியத்தை வருத்திக் கொண்டுதேர்வை திறம்பட எதிர்கொள்ளவே முடியாது. உடல் வலுவாக இருந்தால்தான் உள்ளமும் வலுவாக இருக்கும்.
நாம் எடுத்துக்கொண்ட காரியத்தில் கவனத்தை குவிக்க முடியும். இதற்கு உணவு பழக்கத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள் எடுத்துகொள்வது நலம். இதில் இயற்கை பொருட்களாக இருந்தால் கூடுதல் சிறப்பு.
முதலில் 2 தொடங்கி பதினொன்று, பத்து என தொடர்ச்சியாக தேர்வுகள் நடைபெறும். உடலையும் மனதையும் உறுதியாக்கி நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்..!