

அன்பு மாணவர்களே,
பட்டாம்பூச்சி போல் வண்ணமயமாக உலாவிய தருணங்களுக்கு சற்று இடைவேளை அளிக்கும் காலகட்டம் வந்து விட்டது. ஆம்.... தேர்வு நெருங்கிவிட்டது. இதனால் அந்த மெல்லிய சிறகுகள் கனத்த சிறகுகளாக கழுகு போல் உருமாறத் தொடங்கிவிடும். நாளும் பொழுதும் புத்தகமும் கையுமாக இருக்கவேண்டும். இதற்கிடையே மாணவர்களில் ஒருசாரார் 100 சதவீத மதிப்பெண்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்திருப்பர். இன்னொரு சாரார் 75 சதவீதம் என்றும், சிலர் தேர்ச்சி பெற்றால் போதும் என்றும் புத்தகங்களுடன் யுத்தம் செய்து கொண்டிருப்பார்கள். நம் கல்வி சூழல் செய்த பெரும் பாவம், ஒரு தேர்வை யுத்தமாகவும் போட்டியாகவும் மாற்றியது. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் சமூகத்தால் கொடுக்கப்படும் அழுத்தம் இன்னொரு பாவம்.
இத்தனை நாட்கள் விளையாட்டு, கலை இலக்கியப் போட்டிகள்,அறிவியல் படைப்புகள் போன்றவற்றில் உற்சாகம் அடைந்திருப்பீர்கள். இப்போது மதிப்பெண் உற்பத்தி செய்யும் இயந்திரமாகநீங்கள் மாற்றப்படும் போது வயதுக்கு மீறிய அழுத்தங்கள் ஏற்படக்கூடும். அடுத்த கட்டத்துக்கு முன்னேற தேர்வும் அதில்தேர்ச்சியும் அவசியம்தான். ஆனால், இதற்காக சமூகத்தால் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களை நியாப்படுத்திவிட முடியாது.
கசடற கற்பவையே கல்வி என்றார் வள்ளுவர். அதற்கு ஏற்ப தேர்வு நேரத்திலும் அதற்கு பின்பும் ஒரு மாணவனுக்கு கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்க வேண்டும். பின் நிற்க அதற்குத் தக என மீண்டும் வள்ளுவர் சொல்வதுபோல் கற்றதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்பதற்கான இடைவெளி வேண்டும். தேர்வு ஒருவனுக்கு மலையை கடந்துவிட்ட மனநிலையை ஏற்படுத்தக் கூடாது. அந்த மனநிலை அழுத்தங்கள், நிர்பந்தத்தின் காரணமாக ஏற்படுவதேயன்றி கல்வியின் சாரத்தில் இருந்து உருவாவதல்ல. ஆதலால் தேர்வுக்கு தயாராகும் நேரத்திலும், தேர்வு நேரத்திலும் பதற்றம் கொள்ளாமல் செயல்படுங்கள். பூங்காவுக்கு அல்லது மனதுக்கு அமைதியான இடத்துக்குச் சென்று சற்று இளைப்பாறுங்கள். இயற்கையாக விளையும் உங்கள் சிந்தனையே சமூகத்துக்கு தேவை!