

அன்பு மாணவர்களே...
வானம்பாடிகள் போல் சுற்றித் திரிவதற்கான காலம் என்றால் அது பள்ளிப் பருவம் தான். அப்போது நம் உடல், மனம் என சகலமும் வளம் பெறத் தொடங்கும். அதன் கால ஓட்டத்தில் நம்மை அறியாமலே புதிய சிந்தனைகள் உருவாகும். அதில் சில மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும்.
இதன் இடைப்பட்ட காலங்களில் ஏற்படும் சறுக்கல், அளவு கடந்த அறிவுரைகளால்தான். இவர்கள் சிறுவர்கள் தானே..... நாம் கடந்து வந்த பாதையில் தானே இவர்களும் வருவார்கள்... போன்ற பேச்சுகளை உங்கள் சுற்றத்தில் இருக்கும் பெரியவர்களிடம், உறவினர்களிடம் கேட்டிருக்க கூடும். இது நம் சமூகத்தில் இருக்கும் பெரிய மாயை. இதுபோன்ற பேச்சுகளால் பல பள்ளி மாணவர்களின் கற்பனை வளர்ச்சியும் சிந்தனை கூறுகளும் மட்டுபடுவதற்கான அபாயம் உண்டு.
உதாரணமாக ஒத்த வயதுடையவர்கள் என்றாலும் ஒரே வகுப்பில் படிக்கக் கூடியவர்கள் என்றாலும் அவர்களின் எண்ணங்கள்வேறு. பெரியவர்களால் சொல்லப்படும் அறிவுரைகளும் போதனைகளும் யாவருக்கும் ஏற்புடையது என்று சொல்வதற்கில்லை. அடிப்படையில் ஒருவருக்கு அறிவுரை வழங்க வேண்டுமென்றால் அவர் குறித்த பெரும் புரிதல் இருக்க வேண்டும்.
இதற்கிடையில் பெரும்பாலான மாணவர்களுக்கு சவாலாக இருப்பது தங்களுக்குள் இருக்கும் திறமை என்னவென்று புரியாதது தான் பின்னர் அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது தெரியாது. ஏனெனில், மாணவர்களுக்கு தேவையானது ஆலோசனைகள் தானே தவிர அறிவுரைகள் அல்ல.
அதனால் மாணவர்களே... இனி உங்களிடம் அறிவுரை கூற வருபவர்களிடம் சொல்லுங்கள், இதுவே என் ஆசை, இதுவே எனது பார்வை, இதை செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளை கூறுங்கள் என்று உரக்கச் சொல்லுங்கள். இதன் மூலமே நமது பொன்னான நேரத்தை பயனுள்ளதாக மாற்ற முடியும்.