விளையாட்டை தள்ளி போடுங்க

விளையாட்டை தள்ளி போடுங்க
Updated on
1 min read

அன்பு மாணவர்களே...

பொதுத் தேர்வு தொடங்க இன்னும் ஒரு மாத காலம்தான் இருக்கிறது. மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வுக்கு இப்போதே மாதிரித் தேர்வு, ரிவிசன் என தேர்வுக்கு ஆசிரியர்கள் உங்களை தயார்படுத்திக் கொண்டு இருப்பார்கள். அதேபோல், பொதுத் தேர்வு நெருங்க நெருங்க உங்களுக்கும் தேர்வு பயம் அதிகரித்து இருக்கும்.

மாணவர்களே இப்போது உங்கள் கவனம் எல்லாம் பொதுத் தேர்வில்தான் இருக்கவேண்டும். குறிப்பாக, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். தங்களின் கவனத்தை டிவி, செல்போன் போன்ற காரியத்தில் சிதறவிட அதிகம் வாய்ப்பு உள்ளது.

கவனம் அதிகமாக இருக்க வேண்டும் என்று ஏன் அனைவரும் கூறுகிறார்கள் என்றால், உங்கள் உயர்கல்வி எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கும் தருணம் இந்த பொதுத் தேர்வுதான். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்து 11-ம் வகுப்பில் என்ன பாடம் எடுத்து படிக்கலாம் என்று பொதுத் தேர்வு மதிப்பெண் தான் தீர்மானிக்கும்.

அதேபோல், 12-ம் வகுப்பு மாணவர்கள் அடுத்து பொறியியல் படிப்பா அல்லது கலை அறிவியல் படிப்பா என்பதை முடிவு செய்யும் தருணம் இதுதான். இதில் கோட்டை விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பின்பு தேர்வு முடிவு வந்த பின்னர், வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை.

அதே வேளையில் மாணவர்கள் வெளியில் சென்று விளையாடுவதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். அசுத்தமான இடங்களில் விளையாடுவதால், தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படலாம். இதனால், நோய் ஏற்பட்டு தேர்வுக்கு தயாராக முடியாமல் போகலாம். அதேபோல், வீட்டின் அருகே கொசு உற்பத்தி ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பள்ளிகளில் அதுபோன்று இருந்தால் வகுப்பு ஆசிரியர்களிடம் கூறி, சுத்தம் செய்ய சொல்லுங்கள். தேர்வு நெருங்கும் நேரத்தில் உடல்நலம் மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியும்.

எனவே வீட்டின் உள்ளே டிவி, செல்போன் மீது கவனம் செலுத்தாமலும், வெளியே விளையாட்டு மீது கவனம் செலுத்தாமலும் படிப்பை தொடருங்கள்... பொதுத் தேர்வு விடுமுறையில் துள்ளாட்டம் போடுங்கள்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in