

கல்வி, சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பெரும்பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், கல்விக்கென பிரத்தியேகமாகச்சிலருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. இருப்பினும்பிற துறை பங்களிப்புகளுக்காக விருது அறிவிக்கப்பட்டிருப்பவர்களில் பலர் கல்வியோடும் தொடர்புடையவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. சுவாரசியமாக தோன்றுகிறது அல்லவா மாணவர்களே!
பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் தமிழரான எஸ்.ராமகிருஷ்ணன் ஓரு சமூக சேவகர். கல்வி, திறன் வளர்ப்பு பயிற்சிகளை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குக் கடந்த 40 ஆண்டுகளாக வழங்கிவருகிறார். இவரால் பலனடைந்த கிராமங்களின் எண்ணிக்கை 800-ஐ தாண்டும். இவருக்கு 20 வயது இருக்கும்போது விபத்தில் சிக்கியதால் கழுத்துக்கு கீழே செயலிழந்து போனது.
அதன் பிறகு தன்னை போலவே பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினார். இவரை போலவே காஷ்மீரைச் சேர்ந்த ஜாவத் அகமத் தக் என்பவரும் சமூக சேவகர். இவரும் நேரடியான கல்வியாளர் அல்ல. ஆனால், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி நடத்திவருகிறார். இவரும் ஒரு மாற்றுத் திறனாளியே.
மறுபுறம் கர்நாடகத்தைச் சேர்ந்த பழங்குடியின மூதாட்டி துளசி கவுடா. இந்த பாட்டி எந்த பள்ளிக்கூடத்துக்கும் செல்லவில்லை, பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறவில்லை. ஆனால், இவருடைய பட்டப்பெயரே, ‘அறிவின் அகராதி’தானாம்.தாவரங்கள் குறித்தும் பலவிதமான வன உயிரினங்கள் குறித்தும் ஆழமான ஞானம் படைத்தவராம்.
ஆயிரக்கணக்கான மரங்களைக் கடந்த 60 ஆண்டுகளாக நட்டு, வளர்த்துவந்திருக்கிறார். அதேபோல அருணாசல பிரதேசத்தில் உள்ள சத்யநாராயணன் முன்டையூர் என்பவர் கடந்த 40 ஆண்டுகளில் 13 நூலகங்களை நிறுவியுள்ளார். இப்படி மென்மேலும் ஆச்சரியப்படுத்தக்கூடிய கல்விசார்ந்த சேவைகளை இந்தாண்டு பத்ம விருதாளர்கள் பலர் செய்திருக்கிறார்கள். நீங்களும் தேடிப் படித்துப்பாருங்கள். அதன் பிறகு கல்வி குறித்த உங்களுடைய பார்வை நிச்சயம் விரிவடையும்.