

மகனும் மகளும் ஒன்றுதான் என்று சொல்லும் பெற்றோர்கள் இன்று அதிகம். ஆனாலும், தெருவுக்குச் சென்று நண்பர்களோடு கிரிக்கெட், கால்பந்து, ஓட்டப் பந்தயம் போன்ற விளையாட்டுகளை ஆட ஆசைப்படும் பெண் குழந்தைகளை தடுத்துநிறுத்தி, கண் மண்ணு தெரியாம விளையாடி கை, கால உடச்சிக்கிட்டீனா உன்ன யாரு கட்டிப்பா என்ற கேள்வி இன்றும்நம்முடைய வீடுகளில் உலாவிக்கொண்டுதான் இருக்கிறது.
விளையாட்டு என்று இங்கு நாம் சுட்டிக்காட்டியது ஒரு உதாரணத்துக்குத்தான். ஆனால், நிதர்சனம் என்ன வென்றால், தரமான கல்வி அளிப்பது முதற்கொண்டு இந்திய பெற்றோர் இன்றும் தங்களுடைய மகனுக்கும் மகளுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என்கிறது 2019-ம் ஆண்டுக்கான கல்வி அறிக்கை.
இந்தியாவில் உள்ள 4 முதல் 8 வயதுள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.இந்த குழந்தைகளில் பெரும்பாலான சிறுமிகள் அரசு பள்ளிகளிலும் பெரும்பாலான சிறுவர்கள் தனியார் பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நாம் சொல்ல வருவது, அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளை விடவும் தரம் தாழ்ந்தவை என்பதல்ல. தமிழகம் உட்பட கேரளம், டெல்லி உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவுக்குச் சிறப்பாக அரசு பள்ளிகள செயல்பட்டுவருவதை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், நாம் பரிசீலனை செய்ய வேண்டியது பெற்றோரின் மனோபாவத்தைத்தான். பணம் செலவழித்து மகனைப் படிக்க வைக்க தயாராக இருக்கும் பல பெற்றோர் இன்றும் தங்களுடைய மகளுக்கு அதைச் செய்ய தயார் இல்லை.
அப்படியானால் இதே அணுகுமுறையைத்தான் மகனுக்கும் மகளுக்கும் வழங்கும் உணவு, உடை உள்ளிட்ட பலவற்றில் கடைப்பிடிப்பார்கள் என்பது இதில் மறைந்திருக்கும் சொல்லப்படாத உண்மை. இதை அறிந்தோ அறியாமலோ செய்யும் பெற்றோர் இனியேனும் மகனும் மகளும் சமம் என்பதை மறவாதீர் என்பதே எங்கள் வேண்டுகோள்.