

அன்பு மாணவர்களே...
இன்னொரு விழிப்புணர்வு வாரம் தமிழகத்தில் நேற்று தொடங்கிவிட்டது. ஆமாம், சாலை பாதுகாப்பு வாரம். எதற்காக இது? நாம் அனைவரும் வாகனங்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டினால் எதற்கு இந்த வாரம். ஆனால், பல ஆண்டுகளாக இந்த வாரம் கடைபிடிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.
அதற்குக் காரணம் என்ன? தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அதிக வேகம், வளைவுகளில் வேகத்தைக் குறைக்காமல் வாகனத்தை ஓட்டுவது, மழைக்காலங்களில் வேகமாக செல்வது, 2 பேருக்கு மேல் இருசக்கர வாகனத்தில் செல்வது, குறுகிய இடத்தில் முந்திச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, சரியான தூக்கம் இல்லாமல் ஓட்டுவது... இப்படி பல காரணங்கள் உள்ளன. இவை எல்லாவற்றையுமே தவிர்க்க முடியும். ஆனால், அலட்சியமாக இருக்கிறோம்.
அரிய உயிரை, விலைமதிப்பில்லா உயிரை பாதுகாப்பதற்கு விழிப்புணர்வு வாரம் தேவையா என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த வாரத்தில் அரசு சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவிகளுக்குச் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பலருக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி கூறும்போது, ‘‘விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைப் பிடிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைவான மாநிலம் தமிழ்நாடுதான் என்பது பெருமைக்குரிய விஷயம். எனினும், முழுவதுமாக விபத்து இல்லாத மாநிலமாக மாற வேண்டும். அதற்கு நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் நிச்சயம் தேவை. இதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.