

பெங்களூரை சேர்ந்த இந்திய மேலாண்மை நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அகில இந்திய மாநாடு வெகு கோலாகலமாக நடைபெற்றது. ‘கற்றல், கற்றகலுதல், மீள் கற்றல்’ (Learning to Learn, Unlearn and Relearn) என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் பலர் பேசினர். கல்வியாளர்கள், தொழிற்துறை வித்தகர்கள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள், பெருநிறுவன தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் இது தொடர்பான தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
‘தொழிற்புரட்சி 4.0’ என்றழைக்கப்படும் டிஜிட்டல் யுகத்தில் கல்வி, பணி ஆகியவை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது. அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கல்விச் சூழலில் கொண்டுவரப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன ஆகியவை விவாதிக்கப்பட்டன. மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல கருத்துக்களுக்கு மத்தியில் இன்போஸிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கற்றுகொள்ளக் கற்பதே கல்வி என்று நாராயண மூர்த்தி பேசினார்.
அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. ஆனால், புதுமையான பார்வையில் அதைச் சொன்னார். கற்றல் என்ற செயல்பாட்டில் ஈடுபடும் போது ஒருவருடைய அறிவின் எல்லை விரிவடையும். எது சரி, எது தவறு என்பதை அலசி ஆராயும் திறன் மேம்படும். எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளும் பேரார்வம் துளிர்க்கும், இலக்கை வகுக்க வழிகாட்டும்.
அடைய முடியாத எல்லையைத் தொட உங்களை உந்தித்தள்ளும். எதிர்காலத்தில் சமூகம் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வை இப்போதே கண்டறிய வழிவகுக்கும். - இதுதான் கற்றுகொள்ள கற்பது என்பதற்கு நாராயண மூர்த்தி அளித்த விளக்கமாகும்.
உண்மைதானே மாணவர்களே! நீங்கள் தற்போது பள்ளியில் படிக்கும் பாடத்துக்கும் எதிர்காலத்தில் நீங்கள் செய்யப்போகும் வேலைக்கும் அன்றாட வாழ்க்கைக்கும் நேரடியான தொடர்பு இல்லாமல்கூட போகலாம்.
ஆனால், சூழலுக்கு ஏற்ப எதையும் செய்யக்கூடிய ஆற்றலை உங்களுக்கு ஊட்டப்போவது இன்று நீங்கள் கற்கும் கல்வியே. ஆகையால் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் பாடங்களினால் என்ன பயன் என்று சாதாரணமாக நினைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கற்க கற்றுக்கொள்ளுங்கள்!