இடைவிடாது படிப்போம்! ஜெயிப்போம்!
இந்தியாவில் ஆரம்பப் பள்ளியில் 100 மாணவர்கள் சேர்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களில் 70 மாணவர்கள் மட்டுமே மேல்நிலைப் பள்ளி படிப்பை முடிக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை. 2020-ம் ஆண்டிலும் ஒவ்வொரு 100-ல் 30 குழந்தைகளால் பிளஸ் 2-வை தாண்ட முடிவதில்லை என்றால் நம்ப முடிகிறதா மாணவர்களே! ஆனால், அது தான் நிதர்சனம்.
இதில் அதிகப்படியான இடைநிற்றல் ஏற்படும் மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது. அங்கு 100-ல் 30 மாணவர்கள் மட்டுமே பள்ளிப் படிப்பை முடிக்கிறார்கள். காரணம் அங்குள்ள மாணவர்களுக்கு கல்வி பெறும் தகுதி இல்லை என்று நினைத்து விட வேண்டாம்.
ஏழ்மை, கல்வி குறித்த விழிப்புணர்வு போதாமை, போக்குவரத்து வசதி இன்மை, பெண் குழந்தைகள் வெளியில் செல்ல பாதுகாப்பற்ற சூழல், சமூக ஏற்றத் தாழ்வு உள்ளிட்ட பல காரணங்கள் கல்விக்கு மிகப் பெரிய தடையாக இன்றும் நீடிக்கின்றன. ஒட்டுமொத்த இந்திய மக்கள்தொகையில் கல்வி பெரிதும் சென்றடையாத சமூகமாக இன்றுவரை உள்ளது பழங்குடியினர் சமூகமாகும். இப்படி சமூக, பொருளாதார சிக்கல்களால் படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு பல குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள்.
இதில் ஆறுதல் என்னவென்றால், தமிழகம், கேரளம், இமாசல பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் உள்ள மாணவர்களில் 85 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பிளஸ் 2 வரை படித்து விடுகிறார்கள். மிகக் குறைந்த சதவீத்தில் இடைநிற்றல் ஏற்படும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
இருந்தாலும் பள்ளிப் படிப்பை பாதியில் இழக்கும் மாணவர்கள் நம் மாநிலம் உட்பட அத்தனை மாநிலங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் உங்களுக்குக் கல்வி கிடைத்திருப்பது என்பது எவ்வளவு பெரிய வரம் என்பதை உணருங்கள் மாணவர்களே. உங்கள் கைக்கு எட்டிய வரத்தை ஒருபோதும் தவறவிடாதீர்கள். இடைவிடாது படிப்போம், ஜெயிப்போம் என்று அனுதினம் சொல்லுங்கள் வெல்லுங்கள்.
