

அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் என ஏகப்பட்ட கொண்டாட்டங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி தொடங்கிவிட்டது. இப்போது விடுமுறை மனநிலையில் இருந்து மீண்டு பாடம், தேர்வு என்கிற பரபரப்பான மனநிலைக்குள் வர மனம் ஒத்துழைக்காது.
என்ன செய்யலாம்?
முதலாவதாக பாடமும் பள்ளியும் கொண்டாட்டத்தின் நீட்சியாக உணரப்பட்டாலே பெரும்பாலான சிக்கல் தீர்ந்துவிடும். கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படிப்பது என்பார்களே! சொல்வது எளிது ஆனால், செய்பவர்களுக்குத்தானே கஷ்டம் தெரியும் என்கிறீர்களா? அது சரி.
முதல் அஸ்திரம் வேலைக்கு ஆகாது என்றால், உங்கள் கண்முன்னே வரிசை கட்டி நிற்கும் தேர்வுகளைப் பட்டியலிடுங்கள். உங்களில் பலர் பொதுத் தேர்வு எழுதவிருப்பீர்கள். அதற்கு முன்னதாக இடைநிலைத் தேர்வுகள் வேறு அவ்வப்போது நடைபெறவிருக்கின்றன. இவை அனைத்துக்கும் துல்லியமான ஒரு அட்டவணையை தயார் செய்யுங்கள். இவற்றை செய்யும்போதே உங்களுடைய மனம் அடுத்த ஆட்டத்துக்கு ஆயத்தமாகிவிடும்.
எந்த பாடங்களில் கில்லாடி, எவற்றில் பின்தங்கி இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து முன்கூட்டியே படிக்க வேண்டியவை, கடைசி நேரம் படித்தால் போதுமானவை ஆகியவற்றைப் பிரித்து எழுதுங்கள். பள்ளி நாட்களோ விடுமுறை நாட்களோ எதுவாயினும் உங்களுடைய திட்டப்படி தயாராவதை தள்ளிப்போட
வேண்டாம்.
இவ்வளவு மெனக்கெடல் தேவையா என்று மனம் உங்களை பின்னிழுக்க முயலும்போதெல்லாம் உங்களுடைய இலக்கை அதனிடம் சொல்லுங்கள். இலக்கா? இதென்ன புதுக்கதை என்கிறீர்களா?
தொலைநோக்கு பார்வை அவசியம் மாணவர்களே! அதுவே நம்மை முன்னேற்றப் பாதையில் உந்தித்தள்ளும் நெம்புகோலாகும். அடுத்த பத்தாண்டுகளில் நீங்கள் யாராக உருமாறி நிற்க வேண்டும் என்பதைக் கனவு காணுங்கள். அந்த கனவு நோக்கிய பயணத்தில் இறங்கிவிட்டால் எது அத்தியாவசியம், எது அனாவசியம் ஆகியவை தானாக புலப்படும்.
வாழ்த்துகள்!