

நம்முடைய சிந்தனைக்கு அபரிமிதமான ஆற்றல் உண்டு. ஏனென்றால் நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதுவே செயலாக நம்மிடம் இருந்து வெளிப்படுகிறது. ஆகையால், தேர்வுக்கு முந்தைய தினத்தன்று மனதை அமைதிப்படுத்திப் படித்த பாடங்களை அசைபோடுங்கள், கடைசி நிமிடத்தில் புதிய பாடங்களை அவசர அவசரமாக புரட்ட வேண்டாம். கட்டாயம் கேட்கப்படும் கேள்விகளை அதிலும் நெடிய பதில்கள் கொண்டவை என்றால் ஆரம்பத்தில் இருந்து வரிக்கு வரி வாசிக்க வேண்டாம். அதற்கு பதிலாக அதில் உள்ள முக்கிய புள்ளிகளை, குறிப்புகளை எழுதிப் பாருங்கள். மாதிரி தேர்வு எழுதி பயிற்சி எடுக்கும்போது தேர்வறையில் எழுதவிருக்கும் பேனாவிலேயே எழுதிப் பாருங்கள்.
சிலருக்கு தனிமையில் படிப்பது கைகொடுக்கும். சிலருக்கு நண்பர்களுடன் சேர்ந்து படிப்பது ஒத்துவரும். உங்களுக்கு எது உகந்தது என்பதைப் பொறுத்து பாடத்தில் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். அதிலும் உங்களுடைய மனவோட்டத்துக்கு பலம் சேர்ப்பவர்களுடன் மட்டுமே இணைந்து திருப்புதல் மேற்கொள்ளுங்கள்.
தயாரிப்புக்கு தரும் முக்கியத்துவத்தை உணவுக்கும் ஓய்வுக்கும் தர மறவாதீர்கள். அவ்வப்போது தண்ணீர் பருகுதல் மூளைக்கு அவசியமான ஆக்சிஜனை சீராக வழங்கும். தூங்க செல்வதற்கு முன்னர் தேர்வு தொடர்பான ஹால் டிக்கெட்டில் தொடங்கி எழுதுகோல் வரை அத்தனையும் கவனமாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். சில நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து கண்களை மூடி அடுத்த நாள் நீங்கள் சிறந்த முறையில் தேர்வெழுதுவதை மனக்கண்ணால் பாருங்கள். வெறுமனே கற்பனை அல்ல மனக்கண்ணால் பாருங்கள்!வழக்கமாகக் கிளம்புவதை விடவும் தேர்வு நாளன்று சில நிமிடங்களேனும் முன்கூட்டியே தேர்வு நிகழும் இடத்துக்குச் சென்றுவிடுங்கள். உங்களுடைய கடின உழைப்புக்கான, விடா முயற்சிக்கான பலனை ஈட்ட உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்புதான் தேர்வு. கடமையைச் சரியாக செய்தவர்களுக்குப் பலன் தானாக கைகூடி வரும். அதை பற்றிய கவலையோ, பதற்றமோ துளியும் தேவை இல்லை. இங்கு நீங்கள் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டியது ஒன்றுதான்: ‘வெற்றி நிச்சயம்’.