

சொன்னதை செய், அடிபணிந்து நட என்கிற அறிவுரைகள் முன்பெல்லாம் மாணவர்களை அச்சுறுத்தின. இன்றோ, சுயமாக சிந்தி, இஷ்டப்பட்டதை செய், நீயாக முடிவெடு என்பதுபோன்ற உத்வேகப் பேச்சுகள் மாணவர்களைத் துரத்துகின்றன. பத்துபதினைந்து ஆண்டுகளாகக் குழந்தைகளை அடக்கி வைத்துவிட்டு திடீரென்று ஒரு நாள், உன் வாழ்க்கை உன் கையில் என்று சொல்வது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போன்ற உணர்வைத்தான் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும்.
எல்லோருமே மேதைகள்தான். ஆனால், மரம் ஏறும் திறமையை வைத்து மீனுக்கு நீங்கள் மதிப்பெண் அளிப்பீர்களேயானால், அந்த மீன், தான் ஒரு முட்டாள் என்கிற எண்ணத்திலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்துக் கொண்டிருக்கும் என்று கல்வி அமைப்பு குறித்து இயற்பியல் மேதை ஐன்ஸ்டைன் முன்வைத்த விமர்சனத்தை இங்கு ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. மரம் ஏறத் தெரியாதது மீனின் குற்றம் அல்ல. அதை வைத்து மீனின் திறனை தீர்மானிக்கக் கூடாது. நீந்துவதுதான் மீனின் இயல்பு. ஆகையால் அதை மட்டுமே மீனிடம் எதிர்பார்க்கலாம். அதேபோல ஒவ்வொரு குழந்தையிடமும் ஒரு தனித்தன்மை பரிமளிக்கும். அதை வளர்த்தெடுத்துக் கொண்டாடினால் அந்தக் குழந்தை பிரகாசிக்கும்.
மனிதர்களை பொருத்தவரை அவர்களுடைய திறன் எது என்பதைக் கண்டறிவது அவ்வளவு சுலபமல்ல. தனக்கு இஷ்டமானது எது, அதில் எது தன்னுடைய திறனோடு ஒத்துப்போகக் கூடியது, விரும்பியதை பணிவாழ்க்கையாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் வசதியும் தனக்கு இருக்கிறதா என்பதையெல்லாம் மாணவர்கள் கண்டறியும் சூழலை வீடுகளிலும் பள்ளிகளிலும் ஏற்படுத்துவோம். அதன் பிறகு யாரும் சொல்லாமல் அவர்களே தானாக சிறகடித்துப் பறப்பார்கள்.