நேர்மையை பழிக்காதீர்கள்

நேர்மையை பழிக்காதீர்கள்
Updated on
1 min read

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நேர்மையாக இல்லை என்று திரைப்படங்களிலும் பலர் சொல்லியும் நீங்கள் நிச்சயம் அறிந்து இருப்பீர்கள். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் (அன்னை வளர்ப்பினிலே மட்டுமல்ல) சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது.

அப்படி என்றால் இன்று நேர்மை இல்லாதவர்கள், உங்களை போல மாணவர்களாக, இளைஞர்களாக இருந்துதானே பெரியவர்களாக வளர்ந்து இருப்பார்கள். அவர்கள் தவறான வழியில் நடக்க இந்த சமூகமாக நாமும் காரணம்தான்.

ஒரு வகுப்பறையை எடுத்துக் கொண்டால், அதில் நிச்சயம் நேர்மையான மாணவர்கள், மாணவிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு சக மாணவர்களாக நாம் என்ன பெயர் வைத்து அழைக்கிறோம் என்று சிந்தித்து பாருங்கள்.

ஆசிரியர் இல்லாத நேரத்தில் உங்களை வழிநடத்தும் வகுப்பு தலைவரை / தலைவியை ‘கூஜா’ போன்ற சொற்களால் எவ்வளவு கேலி செய்கிறீர்கள்! உங்கள் தவறை சுட்டிக்காட்டும் நண்பனை, எவ்வளவு இழிவாக நடத்துகிறீர்கள். தவறை சுட்டிக் காட்டுபவனே நண்பன். அதை மறைப்பவரும், துணை நிற்போரும் உங்கள் எதிரி என்று புரிந்துக் கொள்ளுங்கள்.

இதை தவறு என்று அறியாமலே தொடர்ந்து செய்து வருகிறீர்கள். தானும் நேர்மையாக இல்லாமல், நேர்மையாக இருப்பவர்களையும் இழிவாக நினைப்பது சரியா என்று நினைத்து பாருங்கள்.

நேர்மை என்பது வாழ்க்கை நெறி. அதை மறந்து கேலி செய்யும் நீங்கள்தான், நல்ல குழந்தைகளை தீய வழியில் நடக்க தூண்டும் சமூகம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒழுக்கம், நேர்மை இப்போது கசப்பாக இருக்கலாம். ஆனால், உங்கள் மதிப்பை உயர்த்தும். எனவே, நேர்மையை பழிக்காதீர்கள். நேர்மையாக நடந்து, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குங்கள். உங்களால் முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in