

அன்பான மாணவர்களே...
இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் 80 சதவீதம், சாலை விதிகளை முறையாக பின்பற்றாமல்தான் நடக்கிறது என்று ஐ.நா கூறியுள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் உயிரிழப்பதாகவும், பல லட்சம் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை இழப்பதாகவும் மத்திய போக்குவரத்துத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தடுக்க நாளைய இந்தியாவான மாணவர்களாகிய நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உங்களின் பெற்றோரோ அல்லது உறவினர்களோ உங்கள் முன்பாக சாலை விதிகளை மீறினால், தைரியமாக தட்டிக் கேளுங்கள்.
பைக்கை அப்பா ஓட்ட பெட்ரோல் டேங்க் முன்னால் குழந்தை, பின்னால் அம்மா, இன்னொரு குழந்தை என்று செல்வது எவ்வளவு ஆபத்தானது. உங்கள் தந்தை கவனமாகவும் பொறுப்புடனும் வாகனம் ஓட்டினாலும் பின்னால் வருபவர், எதிரில் வருபவர் அப்படி இருப்பார் என்பது என்ன நிச்சயம். உங்களை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு உங்கள் தந்தை ஒரு வழிப்பாதையில் சென்றால், ‘இனி உங்களுடன் வர மாட்டேன்’ என்று கூறுங்கள்.
ஒரு சின்ன விளையாட்டு பொருளுக்கு தந்தையிடம் அடம் பிடிக்கும் நீங்கள், தந்தை மற்றும் உங்கள் உயிருக்காக அடம் பிடிப்பதில் தவறு இல்லை. ஆசிரியர்கள் ஹெல்மெட் அணியாமல் பள்ளிக்கு வந்தால் தைரியமாக சுட்டிக்காட்டுங்கள்.
ஹெல்மெட்டின் அவசியம் குறித்து நண்பர்களிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். எப்போதும் வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது என்று அறிவுறுத்துங்கள். தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பாக தேசிய சாலை விதிகள் விழிப்புணர்வு வாரம், ஆண்டுதோறும் நவம்பர் 18-ம் தேதி முதல் 24 வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விழிப்புணர்வு வாரத்தில், முதலில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு எவ்வளவு தீவிரமான சட்டங்கள் கொண்டு வந்தாலும், அபராதம் விதித்தாலும் சாலை விதிகளை பின்பற்ற தனி நபர் ஒழுக்கம் அவசியம் தேவை.
எனவே, நாளை நீங்கள் பெரியவர்கள் ஆனாலும் கூட சாலை விதிகளை பின்பற்றுவேன் என்று உறுதிமொழி எடுங்கள். உலகுக்கு முன்மாதிரியாக இருங்கள்.