

சென்னை
தமிழக பள்ளிக்கல்வி இயக்கக்தின் கீழ் 37,211 அரசு பள்ளிகளும் 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில் வெவ்வேறு பிரிவுகளுக்கு தலைமை அதிகாரிகளாக இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாக ரீதியில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் துறையின் தலைமை அதிகாரியாக அத்துறையின் முதன்மைச் செயலர் (ஐஏஎஸ் அதிகாரி) இருந்து வருகிறார். தற்போது பிரதீப் யாதவ் துறையின் முதன்மைச் செயலராக உள்ளார்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக ஆணையர் பதவிஉருவாக்கப்பட்டுள்ளது. ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்தியன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘தொடக்கக்கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு தேர்வுத் துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத் துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, வயது வந்தோர் மற்றும் முறைசாரா கல்வி என பள்ளிக்கல்வியின் கீழ் 10 இயக்குநரகங்கள் செயல்படுகின்றன.
இந்த துறைகளைச் சேர்ந்த இயக்குநர்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து நிர்வாகபணிகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் நிலவுகின்றன. இதுதவிர புதிய கல்விக் கொள்கைவிரைவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இதையடுத்து சிரமங்களைத் தவிர்க்க,பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி புதிதாகஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இனி பள்ளிக்கல்வியின் அனைத்துத் துறைகளின் இயக்குநர்களும் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள். ஆணையருக்கான அலுவலகம்சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐவளாகத்தில் ஒதுக்கப்பட உள்ளது. ஆணையருக்கான அதிகாரம் மற்றும் பணி வரம்புகள் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’ என்று தெரிவித்தனர்.
ஏற்கெனவே, தமிழ்நாடு பாடநூல்மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் பதவியிலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின்தலைவர் பதவியிலும் ஐஏஎஸ்அதிகாரிகள்தான் உள்ளனர்.
தற்போது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை ஆணையர் பதவியிலும் ஐஏஎஸ் அதிகாரியே நியமிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.