

ஏற்கெனவே பல்வேறு சுகாதார பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். உணவு, தண்ணீர் எல்லாமே செயற்கையாகிவிட்டன. இப்போது காற்று மாசு சேர்ந்துள்ளது. இதில் டெல்லி சிக்கித் தவிக்கிறது. தற்போது தமிழகத்தில் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான ஆப்கானிஸ்தானிலும் காற்று மாசு பிரச்சினை தலைதூக்கி உள்ளது. அங்கு நிலவும் தீவிரவாதம், போர் போன்றவற்றைவிட பயங்கரமானது காற்று மாசு என்று காபூலில் உள்ள யூசுப் என்பவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே காற்று மாசுவினால் அவரது 5 குழந்தைகள் சளித் தொல்லை, மூச்சுத் திணறல் போன்றவற்றால் இறந்துள்ளனர்.
இதுகுறித்து ஆப்கன் அரசு எந்தப் புள்ளி விவரமும் வெளியிடவில்லை. ஆனால், உலக காற்று தர நிர்ணய ஆய்வு நிறுவனம், ஆப்கனில் கடந்த 2017-ம் ஆண்டு 26 ஆயிரம் பேர் இறந்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், அதே ஆண்டு உள்நாட்டு போரில் 3,483 பேர்தான் இறந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலும் இந்தப் பிரச்சினை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பழைய வாகனங்கள் நச்சுப் புகையை அதிகமாக வெளியேற்றுவது,தரமற்ற எரிபொருளை பயன்படுத்துவதால் ஜெனரேட்டர்கள் வெளியிடும் புகை, நிலக்கரி, குப்பை, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றை சமைப்பது உட்பட பல்வேறு விஷயங்களுக்குப் பயன்படுத்துவது என காற்றை நாமே அசுத்தப்படுத்தி வருகிறோம்.