

நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவக்கூடிய சக்கர நாற்காலிகள் என்றோ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கும் நிர்பந்தத்துக்குள் தள்ளப்பட்டவர்களை உட்கார்ந்த நிலையிலேயே அங்கும் இங்கும் செல்லக்கூடியவர்களாக அதிகாரப்படுத்திய பெருமை இந்த கண்டுபிடிப்புக்கு உண்டு. இருந்தாலும், எல்லோரையும்போல அவர்களுக்கும் நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்படும் இல்லையா! அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள்.
நாட்டின் முதல் நிற்கும் சக்கர நாற்காலியை தற்போது வடிவமைத்திருக்கிறார்கள். ‘எழும்பு’ என்ற பொருள் தரும் ‘அரைஸ்’ என்ற ஆங்கிலப் பெயரை தாங்கள் உருவாக்கிய நிற்கும் சக்கர நாற்காலிக்குச் சூட்டி இருக்கிறார்கள். இதை உட்கார்ந்தபடியும் பயன்படுத்தலாம், நின்றபடியும் பயன்படுத்தலாம்.
முழுக்க முழுக்க உள்நாட்டுப் பொருட்கள், வடிவமைப்பு முறையை கொண்டு உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்பு இது. அந்த வகையில் நம் மாணவர்கள் முன்னோடியாகத் திகழ்கிறார்கள். இது போன்ற நிற்கும் சக்கர நாற்காலியை வெளி நாடுகளில்கூட நான் இதுவரை கண்டதில்லை. சிறப்பு தேவையுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் இந்த நாற்காலி சென்றடைய தேவையான நிதி உதவிகளை அமைச்சகம் செய்ய தயார் என்று மத்திய அமைச்சர் தவார் சந்த் மனதார பாராட்டியுள்ளார்.
படித்து முடித்து கை நிறைய சம்பளம் தரும் ஏதோ ஒரு வேலையில் சேர வேண்டும் என்பதுதான் பொதுவாக பலருடைய கனவாக இருக்கிறது. ஆனால், நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக செயல்படுபவரே உண்மையாக கல்வி கற்றவர் ஆவார். இந்த இலக்கோடு நீங்களும் எழுந்திருங்கள், உயர்ந்திடுங்கள் மாணவச் செல்வங்களே!