

கடுமையான காற்று மாசுபாட்டால் டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்திருப்பீர்கள். இதனால் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது, விமானங்கள் வேறு இடங்களுக்கு மடைமாற்றப்பட்டிருக்கின்றன என்றால் இதன் தீவிரத்தன்மை புரிகிறதா? ஆம்! சராசரியாக ஏற்றுக்கொள்ளகூடிய புகையின் அளவைவிடவும் 40 மடங்கு கூடுதலாக இந்தப் பகுதிகளில் நச்சுப் புகை காற்றில் கலந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களில் நம் நாட்டின் தலைநகரில் மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இது ஒன்றும் முதல் முறை அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகையை ஒட்டியும், அறுவடை காலங்களின்போதும் வட மாநிலங்களில் தடைகளை மீறி பட்டாசுகள் கொளுத்தப்படுவதும், விவசாய நிலங்களில் உள்ள காய்ந்த சருகுகள் எரிக்கப்படுவதும் தொடர்கிறது. இதை செய்தவர்கள் யாரும் தாங்கள் செய்து கொண்டிருப்பது கோடிக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடிய அபாயகரமான காரியம் என்று உணர்ந்திருக்க மாட்டார்கள். சரி, சில நாட்களுக்குத்தானே இந்த பிரச்சினை என்று நினைத்தால்,அதுதான் இல்லை. காற்று மாசுபாடு காரணமாக, பிஹார், சண்டிகர்,டெல்லி, ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களில் வாழும் மக்களின் ஆயுட்காலத்தில் 7 ஆண்டுகள் குறைந்துவிட்டது என்கிறது சமீபத்திய ஆய்வு. ஐநா அறிக்கையின்படி மிக மோசமாக மாசுபட்ட உலகின் 15 நகரங்களில் 14 இந்தியாவில் உள்ளனவாம். இனியேனும், நான் ஒருவன் செய்வதிலா பாதிப்பு ஏற்பட்டுவிட போகிறது? என்று நினைக்க வேண்டாம். நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்!