

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனம் ஒன்றில் தேர்வு நடத்தப்பட்ட விதம் ஒரு வாரத்துக்கு முன்பு சர்ச்சைக்குள்ளானது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த அத்தனை மாணவர்களின் தலையிலும் ஒரு அட்டைப் பெட்டி கவிழ்க்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த வழிமுறையைப் பின்பற்றுவதாக நிர்வாகத் தரப்பில் சொல்லப்பட்டது. மாணவர்கள் தரப்பிலோ, இது அவமானப்படுத்தும் செயலாக கருதப்பட்டது. இங்கு இரண்டு தரப்பு முன்வைக்கும் வாதத்திலும் உண்மை உள்ளதை பார்க்க முடிகிறது.
தேர்வறையில் பலவிதமான முறைகேடுகள் நடப்பதை ஆண்டுதோறும் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால், இதை தடுக்க மாணவர்களைக் கடிவாளம் போட்ட குதிரை போல அல்லது மூக்கணாங்கயிறு கட்டிய மாட்டைப் போல நடத்துவது தீர்வாகாது!
ஒவ்வொரு குற்றத்துக்கும் தனிநபர்கள் மட்டும் பொறுப்பல்ல.
அதற்கு சில/பல சமூக காரணிகள் இருக்கவே செய்கின்றன. மாணவர்களை தேர்வு அச்சுறுத்தும்வரை முறைகேடுகளும் தொடரும். ஒருவர் தன்னுடைய திறமையைத் தானே மனமுவந்து வெளிப்படுத்தும் தளமாகத் தேர்வறை மாற்றப்பட்டால் அங்குக் குறுக்கு வழி என்ற பேச்சுக்கே இடமிருக்காது. அதைவிடுத்து வருடம் முழுவதும் கற்றதை ஒரு சில மணி நேரத்தில் நிரூபித்துக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் மாணவர்கள் தள்ளப்படுவதால்தான் இதுபோன்ற சிக்கல்கள் தொடர்கின்றன.
மாணவர்களும், தேர்வைக் கண்டு பயப்படாமல் அது தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து உற்சாகத்துடன் களம் இறங்க வேண்டும். இப்படி இரண்டு தரப்பிலும் தேர்வு என்ற முறையை அணுகும் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டால் தேர்வு பயம் விலக, தவறுகளும் நிகழாது.