

தீபாவளியை நல்லவிதமாக கொண்டாடி இருப்பீர்கள். நீங்கள் விரும்பியதில் சில கிடைத்திருக்கலாம். சில கிடைக்காமல் போயிருக்கலாம். அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். உலகிலேயே உங்களுடைய சந்தோஷத்தை நூறு சதவீதம் விரும்பும் சுயநலமற்ற 2 பேர் உண்டு. உங்களுடைய தாயும் தந்தையும்தான் அவர்கள். அவர்களுடைய சக்திக்கு மீறிதான் உங்களுடைய தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்கிறார்கள். நீங்கள் விரும்பியவற்றை வாங்கிக் கொடுக்க ஏது பணம் என்று தாய், தந்தையிடம் கேட்டுப் பாருங்கள். அப்போது அவர்கள் பட்ட கஷ்டம் தெரியும்.
உங்களை அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன்தான் பார்க்க விரும்புகின்றனர் . அதேபோல் நீங்களும் உங்கள் பெற்றோரை மகிழ்விக்க வேண்டாமா? நீங்கள் பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். பெற்றோரின் வருமானத்துக்கு ஏற்றவாறு உங்கள் தேவைகளை சொல்லுங்கள். அவர்கள் திட்டினாலும், அமைதியாக இருங்கள். அன்பாக நடந்து கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசாதீர்கள். அதை உங்கள் நடத்தையாகவே மாற்றிக் கொள்ளுங்கள். அதுவே பிற்காலத்தில் உங்களுடைய ‘ஆளுமை’யாக இருக்கும்.
எதுவும் ஒரு நாளில் வந்துவிடாது. திரைப்பட வசனம் போல சொல்ல வேண்டுமானாலும், ‘ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும்’ நீங்களாக செதுக்கினால்தான் உங்களுக்குள் இருக்கின்ற எல்லா நல்ல குணங்களும் திறமைகளும் வெளிப்படும்.
தீபாவளி பண்டிகை முடிந்துவிட்டது. இன்னும் அதே நினைப்பில் இருக்காதீர்கள். அடுத்தகட்டத்துக்கு போய்விடுங்கள். வேறு என்ன... படிப்பில் கவனம் செலுத்துங்கள்.