

உணவு சாப்பிட்ட பிறகு ஒரு குட்டித் தூக்கம் வரும். அது எல்லோருக்கும் இயல்புதான். பள்ளி வகுப்பறைகளில் மாணவர்கள் தூங்கினால், அலுவலகங்களில் ஊழியர்கள் தூங்கினால் என்ன நடக்கும். அதுவும் உங்களுக்கு தெரியும். ஆசிரியர் திட்டுவார், தண்டனை கொடுப்பார். அலுவலகங்களில் மற்ற ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். மேலதிகாரி கடிந்து கொள்வார். சரி இந்தப் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது எப்படி?சரியான நேரத்தில் தூங்குவது ஒன்றுதான் வழி.
ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்களும், இளைஞர்களும் தூக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.
பகலில் வேலை செய்து, இரவில் தூங்கும் வகையில்தான் நமதுஉடல் தகவமைத்துக் கொண்டுள்ளது. ஆனால், இரவில் இணையதளம், செல்போன் விளையாட்டு என்று நள்ளிரவு அல்லது அதிகாலை வரை விழித்திருக்கின்றீர்கள். அது உங்கள்உடல்நலனை, மனநலனை பாதிக்கும் என்பது தெரியுமா? சிறிதுநேரம் செல்போன், இணையதளத்தில் செலவிடலாம். மணிக்கணக்கில் டிஜிட்டல் திரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தால், பார்வை பாதிப்பு உட்பட பல பிரச்சினைகள் உருவாகும்.
தேவையான நேரம் தூங்கினால், தானாகவே விழிப்பு வரும். மறுநாள் புத்துணர்ச்சியை உணர்வீர்கள். உங்கள் மூளையின் செயல்பாட்டுத் திறனும் சரியாக இருக்கும். ‘சரியாக தூக்கம் வரவில்லை’ என்று மட்டும் பொய் சொல்லாதீர்கள் மாணவர்களே. நல்ல இசையைகேளுங்கள். பள்ளியில் நடந்த நல்ல சம்பவங்களைப் பற்றி பெற்றோருடன் சந்தோஷமாக பேசுங்கள். தூக்கம் தானாக வரும்.