பாதுகாப்பாக மழையை ரசிப்போம்!
கடந்த சில நாட்களாக தமிழகம் எங்கும் அடை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழையை ரசித்தபடி ‘வான் மேகம் பூ பூவாய் தூவும்’ என்று பாடி வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார் ஒரு பள்ளி மாணவி. மழை என்றாலே கொண்டாட்டம்தான். ஆகையால் அவருடைய பாடலை கேட்டு நாமும் ரசித்துக்கொண்டிருக்கிறோம். அதுவும் குடைக்குள் பாதுகாப்பாக நின்றபடிதான் அந்த சிறுமி பாடுகிறாள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஏனென்றால் மழை நீர் நமக்கும் பூமிக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மழைக் காலத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதும் அவசியம் அன்பு மாணவர்களே!
சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் நிறைந்த தெருக்களில் கவனமாகப் பயணம் செல்ல வேண்டும். அதிலும் மழை நேரத்தில் பாதையில் உள்ள மேடு, பள்ளம், திறந்து கிடக்கும் சாக்கடைகள் கண்ணுக்குத் தெரியாது. ஆங்காங்கே மரக் கிளைகள் கொப்பாக முறிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால், வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பெரியவர்களின் துணையோடு மாணவர்கள் பாதுகாப்பாக செல்லுங்கள். வயது முதிர்ந்தவர்கள் வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலை கவசம் அணிந்துகொண்டு செல்லுங்கள். பாதசாரிகள் என்றால் கூடுமானவரை நடைமேடையில் மட்டும் நடந்து செல்லுங்கள்.
மழைக்காலத்தில் கொதிக்கவைத்த சுத்தமான குடிநீரை நிறைய பருக வேண்டும். தண்ணீர் மூலம் பரவும் நோய்களுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை இது உங்களுக்குத் தரும். நகம் கடித்தல், கண்களை கசக்குதல் போன்றவை அறவே செய்யக்கூடாதவை. இப்படி
கவனமாகச் சிலவற்றை கடைப்பிடித்து மழையை ரசிக்கலாம்.
