

விருதுகளின் அணிவகுப்பாகக் கடந்த ஒரு வாரம் இருந்ததைக் கவனித்திருப்பீர்கள் மாணவர்களே! நோபல் பரிசு தொடங்கி மேன் புக்கர் பரிசு வரை பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி 2019-ம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசுக்குத் தேர்வாகி இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
பொருளாதார நிபுணரான அவர் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். என்றாலும் இன்றளவும் தாய்நாட்டை பற்றித்தான் எந்நேரமும் அவர் சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்குச் சான்று அவருக்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசுதான். ஏனென்றால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க முக்கியக் காரணம் அவர் இந்திய பொருளாதாரம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளே.
பொருளாதாரம் என்றதும் பெரும் வணிகம், வர்த்தகம் குறித்து அவர் சிந்திக்கவில்லை. வறுமை ஒழிப்புக்கான வழிகளை அவருடைய எழுத்துக்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. ஏழை மக்களின் வாழ்க்கையைமேம்படுத்த அவசியமான திட்டங்களை அவருடைய ஆய்வு முன்வைக்கிறது. சொல்லப்போனால், ஏழை மக்கள் நலன் குறித்த அக்கறை அவருக்கு உதித்தது இன்று நேற்று அல்ல. கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டின் பின்னால் சிறிய குடிசைகளில் ஏழைகள் வாழ்ந்து வந்ததை அபிஜித் 6 வயதிலேயே அறிந்திருக்கிறார். உண்மையான தேசப்பற்று என்பது இதுதானே மாணவர்களே!
எப்போதெல்லாம், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறதோ, எப்போதெல்லாம் இந்தஇரு நாடுகளுக்கு இடையில் போர் சூழல் மூள்கிறதோ அப்போதுதான் தேசபக்தி கொண்டவர்களாக நாம் மாறுகிறோம். அந்த நேரத்தில்தான், ‘என் தாய்நாட்டை நான் நேசிக்கிறேன்’ என்று நரம்பு புடைக்கச் சொல்கிறோம். ஆனால், நாடு என்பது எல்லையில், விளையாட்டில் மட்டும் இல்லை. அது அந்நாட்டு மக்களின் நிலையைப் பொறுத்திருக்கிறது.
வாருங்கள் மாணவர்களே இன்று முதல் நீங்களும் உங்களைச் சுற்றி இருக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.