

அன்பான மாணவர்களே..
உங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களை நீங்கள் மகிழ்ச்சியாக வரவேற்கிறீர்களா? அதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அப்பா, அம்மா வரவேற்பார்கள் என்று நினைக்க கூடாது. நீங்களும் முகத்தில் சிரிப்புடன் அவர்களை வரவேற்றுப் பாருங்கள். செல்போன், லேப் டாப்பை கொஞ்ச நேரத்துக்கு ஒதுக்கி வையுங்கள். வந்தவர்கள் மனதில் உங்களைப் பற்றிய மதிப்பு எப்படி உயர்கிறது என்பதை உடனடியாகத் தெரிந்து கொள்வீர்கள். இது நமது தமிழ்நாட்டின், தமிழர்களின் கலாச்சாரம்.
இதைத்தான் நமது பிரதமர் நரேந்திர மோடியும், ‘விருந்தோம்பலில் சிறந்தவர்கள் தமிழர்கள்’ என்று புகழ்ந்திருக்கிறார். வீட்டுக்கு வந்தவர்களை முகம் மலர்ந்து அழைக்காவிட்டால், அவர்கள் மனம் வேதனை அடையும் என்பதை, மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (அனிச்ச மலர் முகர்ந்தவுடன் வாடிவிடும்.
அதுபோல் முகத்தில் சிரிப்பு இல்லாமல் பார்த்த உடனே விருந்தினர்களும் வாடி விடுவார்கள்.) என்று கூறுகிறார் திருவள்ளுவர். மகிழ்ச்சியுடன் வரவேற்பது, அவர்களை விசாரிப்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் அப்பா, அம்மா, குடும்பத்துக்கும் நல்ல பெயரை ஏற்படுத்தும். உங்களைப் பற்றிய மதிப்பை உயர்த்தும். செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
அன்புடன்
ஆசிரியர்