

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அபரிமிதமான சக்தி மாணவர்கள். அவர்களை வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் எவ்வளவு உள்ளதோ அதே அளவுக்கு எங்களுக்கும் இருப்பதாக நம்புகிறோம். ஆகவேதான் கல்விப் பாதையில் ‘வெற்றிக்கொடி’ பயணிக்கக் களமிறங்கியுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் சிறப்புகளை வெளி உலகத்துக்குக் கொண்டு செல்வது எங்களுடைய முதன்மையான இலக்கு. அதேபோன்று கல்வி புலத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் முக்கிய நிகழ்வுகளை, வளர்ச்சியை உங்களிடம் தினந்தோறும் வந்து சமர்ப்பிப்பதையும் எங்களுடைய தலையாய கடமையாகக் கொண்டுள்ளோம். ஆகவேதான் நாளிதழாகவே புதிய ‘வெற்றிக்கொடி’யை தொடங்கி இருக்கிறோம்.
சிலர் மட்டுமே கல்வி பெற முடியும் என்ற நிலையில் இருந்து அனைவருக்கும் கல்வி என்ற நிலையை நாம் எட்டியுள்ளோம். இருந்தபோதும் மிகச் சிறந்த கல்வியும் அறிவும் சிலர் மட்டுமே பெற முடியும் என்னும் நிலைதான் ஏதோ ஒரு வடிவில் இன்றும் நீடிக்கிறது. ஆகவேதான் கலை, இலக்கியம், வரலாற்றில் தமிழர்களுக்கு மிகத் தொன்மையான மரபு இருந்தபோதும் ஏனோ கல்வி புலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே மிக உயரிய நிலையை அடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த தமிழக மாணவர்களை உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க அவசியமான அத்தனை செயல்திட்டங்களையும் கொண்டு செயல்படுவதே எங்களுடைய இலக்கு. இதை நாங்கள் மட்டுமே தனியாக செய்யப் போவதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் அர்ப்பணிப்பு மிக்கஆசிரியர்களையும் அவர்களை வளர்த்தெடுக்கும் பள்ளிகளையும் கொண்டே செய்யவிருக்கிறோம்.
வாருங்கள்! அறிவுச்சுடர் ஏந்தும் கைகள் அனைத்தும் கோத்து வெற்றிக்கொடி கட்டுவோம்.
அன்புடன்
ஆசிரியர்