

அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் என்ற நிலையை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பன்முகத்திறனை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மு.அப்பாவு, தனது தொகுதியில் உள்ள 303 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைக்க ஏற்பாடு செய்தார். இதற்காக பல்வேறு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி பெறப்பட்டது. இத்திட்டத்தின் பலன் குறித்து பாளையங்கோட்டையில் உள்ள செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி ஆய்வு நடத்தியது. இதில், அரசு பள்ளி மாணவர்களின் வாசிப்பு, எழுத்து, பேச்சு, பாடங்கள் கவனிப்பு ஆகியவற்றின் திறன் கணிசமாக மேம்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கிளாஸில் வெப்கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணர்களால் மாணவர்களின் ஆங்கிலம் பேசும் திறனும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்த பள்ளிகளில் தினமும் 3 அணிகளாக ஆங்கிலம் பேசக் கற்றுத் தரப்படுவதால் மேற்கண்ட சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறுகையில், ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை அங்கன்வாடிக்கும் விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் கிளாஸ் அமைத்து பயன்படுத்துவதில் ராதாபுரம் தொகுதி முன்னிலையில் இருக்கிறது. இதுபோல அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.க்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தால் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அறிவாற்றல் பெறுவது உறுதி.