ஆரோக்கியத்துடன் தேர்வு எழுதுங்கள்!

ஆரோக்கியத்துடன் தேர்வு எழுதுங்கள்!
Updated on
1 min read

காலாண்டு தேர்வு தொடங்கவிருக்கும் இவ்வேளையில் டெங்கு, ‘மெட்ராஸ் ஐ’ உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியமாகிறது.

நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்வு, நாளை (செப். 15) முதல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கும், செப்., 19 முதல் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தொடங்கவிருக்கிறது. இதுவரை மாணவர்கள் கற்ற பாடங்களை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பே தேர்வு. அதற்கு நினைவாற்றலும், சுறுசுறுப்பான மூளையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உடல் ஆரோக்கியமும் அத்தியாவசியம்.

தற்போது பருவமழை காலம் நெருங்கிவிட்டது. மாணவப் பருவதினருக்கு மழையில் விளையாட அலாதியான பிரியம் இருப்பது இயல்பே. ஆனால், அது ஆபத்துக்கு ரத்தின கம்பளம் விரிப்பதாக மாறிவிடக் கூடாது. இது குறித்து பள்ளியும் பெற்றோரும் முன்னெடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கல்வித்துறை விரிவாக விளக்கியுள்ளது. அவற்றை பின்பற்ற வேண்டியது மாணவர்களின் கடமை.

இதுதவிர பருவமழை வந்தாலே டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களும் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய மழைநீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் உங்கள் வசிப்பிடத்திலும் பள்ளி வளாகத்திலும் மழை நீர் தேங்கி இருப்பின் உடனடியாக பெரியோரிடம் தெரியப்படுத்துங்கள். இது போதாதென்று கண்களை பாதிக்கக்கூடிய தொற்று நோயான ‘மெட்ராஸ் ஐ’யும் வேகமாகப் பரவுவதால் மாணவர்களுக்குக் கண் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

சத்தான உணவு, போதுமான ஓய்வு, சுத்தம், சுகாதாரத்தைப் பின்பற்றி வந்தாலே நோய் அண்டாமல் தடுத்துவிடலாம். இதுபோன்ற அனைத்து வழிமுறைகளையும் கவனமாக கடைபிடித்து ஆரோக்கியத்துடன் தேர்வு எழுதுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in