

கல்வி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட பூர்த்தி செய்யப்படாமல் தவிக்கும் தமிழகத்தின் நாடோடி பழங்குடி சமூகத்தினரின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும் என்று கனிமொழி எம்.பி. உறுதி அளித்துள்ளார்.
கடலூர், மதுரை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 தமிழக மாட்டங்களில் வாழும் 1485 நாடோடி பழங்குடி சமூகத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு அடிப்படையிலான அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் நரிக்குறவர், லம்பாடி, பூம் பூம் மாட்டுக்காரர், காட்டுநாயக்கர் ஆகிய நாடோடி பழங்குடி சமூகத்தினர் கடுமையான பாகுபாட்டை இன்றளவும் எதிர்கொள்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாவதாக இந்த சமூக பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் கேலி, கிண்டல், அவமானத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். குற்றப்பரம்பரை சாதியினர், உணவுப் பழக்கம், பேச்சுவழக்கு, படிப்பில் தடுமாறும் போக்கு ஆகியவற்றைக் காரணம் காட்டி ஆசிரியர்களும் உடன் பயிலும் மாணவர்களுமே இவர்களை ஒதுக்கும் கொடுமை நீடிக்கிறது. இதனால் இவர்களில் 75 சதவீதத்தினர் தொடக்கப்பள்ளியைக் கூடத் தாண்ட முடியாமல் இடைநின்றுவிடுகின்றனர். இதையும் மீறி படித்தாலும் சாதிச் சான்றிதழ் மறுக்கப்படுவதால் அடுத்தகட்டத்துக்கு நகர முடிவதில்லை.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 15 கிராமங்களில் 3-ல் மட்டுமே குடிநீர் வசதி முறைப்படுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் 7 கிராமங்களில் கழிப்பிட வசதிகளே இல்லை. 257 குடியிருப்புகளுக்கு மின்வசதி இதுவரை கிடைத்தபாடில்லை. மருத்துவமனை, மருந்தகம் உள்ளிட்ட சுகாதார வசதிகளும் இப்பகுதி வாழ் மக்களுக்குத் தொலைதூரக் கனவாகவே நீடிக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகநீதிக்காக செயல்படும் தமிழக அரசின் கவனத்திற்கு மிகத் தாமதமாகவே இந்த சிக்கல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இனியேனும் நாடோடி குழந்தைகளையும் சமூகநீதி சென்றடையட்டும்.