

சர்வதேச அளவிலான பிராட்பேண்ட் இணைய வேகத்தில் ஜெர்சி தீவு தேசம் முதலிடத்தையும், இந்தியா 74-வது இடத்தையும் பிடித்திருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிவேக பிராட்பேண்ட் இணையவசதியுடன் கூடிய அலைபேசியில் 5ஜிபி திரைப்படத்தை பதிவிறக்கம் செய்ய 14 நிமிடங்கள், 13 நொடிகள் பிடிக்கிறதாம். அதுவே ஜெர்சியில் அதே அளவிலான திரைப்படம் இரண்டே நிமிடங்களில் பதிவிறக்கம் ஆகிவிடுமாம்.
இந்தியாவின் பரப்பளவுக்கும் மக்கள்தொகை பெருக்கத்துக்கும் ஏற்றார்போல் இணையசேவையை பிரித்து வழங்குவதாலும் பிராட்பேண்ட் சேவை இன்னும் முழுமையாக பரவலாக்கப்படாததினாலும் இந்த வித்தியாசம் என்கிறனர் தொழில்நுட்ப வல்லுனர்கள்.
கற்றல்முறை, தகவல்தொடர்பு உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கு இணையம் அத்தியாவசியமாகிவிட்டது. இதில் நமது நாட்டிற்கும் விரைவில் அதிவேக பிராட்பேண்ட் சேவை பரவலாக்கப்பட வேண்டும். இணையசேவை ஓர் அடிப்படை உரிமை என்ற ஐநா சபையின் வழிகாட்டுதலை 2017-லேயே கேரள அரசு தம் மாநில மக்களுக்கு சட்டப்பூர்வமாக அமல்படுத்தியதன் மூலம் இதிலும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
அரசு பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பொதுமக்களுக்கு என 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பலனடையக் கூடிய அதிவேக பிராட்பேண்ட் இணையசேவையை இலவசமாக கேரளா வழங்கிவருகிறது. இதன்மூலம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கரோனா பெருந்தொற்றுக்காலத்தில் டிஜிட்டல் கல்வி மூலம் கற்றல் இடைவெளி நிகழாதபடி கேரளா சாதித்துக் காட்டியது.
தமிழக அரசு, பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்ட திட்டங்களை துடிப்புடன் முன்னெடுத்து வரும் இவ்வேளையில் அதிவேக இணையவசதியை பரவலாக்கும் நடவடிக்கையிலும் இறங்க வேண்டும்.