

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ளி கிராமத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்த 25 ஏக்கர் நிலப்பரப்பை 8000 மரங்களுடன் கூடிய சோலையாக மாற்றி இருக்கிறார் இளைஞர் ஸ்ரீகாந்த்.
ஐந்தாண்டுகளுக்கு முன்பு, கணினி அறிவியல் பட்டதாரியான ஸ்ரீகாந்தின் அண்ணன் திடீரென விபத்தில் காலமானார். மனமுடைந்த தந்தைக்கு ஆறுதலாக உடன் இருக்க ஸ்ரீகாந்த் சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்.
ஆரம்பத்தில் தந்தைக்கு விவசாயத்தில் ஒத்தாசையாக இருந்தவர் நாளடைவில் தங்களது கிராமம் மரங்கள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை கண்டார். தனது குழந்தை பருவத்தில் பசுமைக் குடிலாகச் செழித்திருந்த கிராமம் தற்போது வறண்ட வானம் பார்த்த பூமியாகிப் போனதை நினைத்து வருந்தினார்.
அருகில் ஓடும் பாலாற்றில் இரவும் பகலுமாக நடந்தேறிய மணல் திருட்டுதான் வறட்சிக்கு முக்கிய காரணம் என்று புரிந்துகொண்டார். மேலும் அக்கம்பக்கத்து வனப்பகுதிகள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருவதையும் கண்டறிந்தார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தார்.
முதல்கட்டமாக இரண்டு ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. அவற்றில் 2018-ல் வேம்பு, புங்கை, அத்தி உள்ளிட்டவற்றின் 1000 மரக்கன்றுகளை நட்டார். ஓராண்டில் அவை செழித்து வளர்ந்தவுடன் ஆட்சியர் உற்சாகமடைந்து ஸ்ரீகாந்துக்கு தேவையான உதவி புரிய முன்வந்தார். அடுத்து பாலாற்றுப் பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது.
கிராமத்தில் செயலிழந்து கிடந்த நிலத்தடி போர்வெல் ரூ.1.5 லட்சம் செலவில் உயிர்ப்பிக்கப்பட்டது. கிராமத்தின் தெருவெங்கும் மரக்கன்றுகளை நட்டார். இதனால், 8000 மரங்கள் கொண்ட சோலையாக தற்போது உள்ளி கிராமம் காட்சியளிக்கிறது. மனமிருந்தால் வனமும் சாத்தியம் என்பதற்கு இளைஞர் ஸ்ரீகாந்த சாட்சி.