

தமிழகத்தில் மருந்தகத் துறையின் வளர்ச்சி 2030-ம் ஆண்டில் ரூ.82,000 கோடி மதிப்பை எட்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இந்தியா, இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த நாடுகளை பொறுத்தமட்டில் சென்னை மருத்துவ கல்லூரியில்தான் மருந்தகப் பட்டப்படிப்பு முதன்முதலில் தொடங்கப்பட்டது.
அதுவும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இத்துறையில் கால்பதித்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. அதனை அடுத்து 1978-ல் சென்னையில்தான் இந்திய அளவில் முதன்முறையாக மருந்தக வர்த்தக பூங்கா உருவாக்கப்பட்டது.
அதன் பிறகு தற்போது ரூ.3,500 கோடி முதலீட்டை ஈர்க்கும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் மருந்து உபகரணங்கள் பூங்கா நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மருந்தகத் துறையில் 2030-ம் ஆண்டில் தமிழகம் ரூ.82,000 கோடி மதிப்பையும் இந்தியா 10,66,000 கோடி மதிப்பையும் எட்டவிருக்கிறது.
இதனால் மருந்தகத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ ஆடைகள், மருத்துவ எலக்ட்ரானிக்ஸ், சத்து மாத்திரைகள், உணவு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்து மருந்துகள் உள்ளிட்ட வேறு பல துறைகளுக்கும் முதலீடு அதிகரிக்கவிருக்கிறது. இதன் விளைவாக அடுத்த சில ஆண்டுகளில் இத்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கிறது.
ஆகையால் உயிரியல், மருத்துவம் ஆகிய பாடப்பிரிவுகளின் மீது பேரார்வம் கொண்ட பள்ளி மாணவர்கள் இப்போதிருந்தே மருந்தகத் துறைக்கு குறிவையுங்கள். அதிலும் நீட் தேர்வை எழுதாமலேயே பி.பார்மா எனும் மருந்தக பட்டப்படிப்பில் சேர முடியும் என்பதால் தன்னம்பிக்கையுடன் அறிவியல் பாட விரும்பிகள் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.