

மகளிர் உயர்கல்வி பெறவேண்டி ஊக்கத்தொகை அளிக்கும் தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டத்தால் கடந்த இரண்டாண்டுகளில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 மாணவிகள் பலனடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கு ரூ.160.97 கோடி பணப்பலன் வழங்கப்பட்டு உள்ளது. கல்வியை அதிலும் பெண் கல்வியை ஊக்குவிக்கத் தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் இத்திட்டம் மாநில அரசின் சாதனைகளில் நிச்சயம் ஒரு மைல்கல்.
அதிலும் ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இத்திட்டத்தின்கீழ் உதவி பெறலாம் என்பது வரமே. வேறு திட்டங்களின்கீழ் ஏற்கெனவே நிதியுதவி பெற்றுவருவதாயினும் புதுமைப்பெண் திட்டத்தின் வழியாகவும் உதவித்தொகை பெறலாம் என்பதெல்லாம் வறுமை பிடியில் வாடும் குடும்பங்களுக்கு ஆர்ப்பாட்டமின்றி அரசு அமைத்துத் தரும் பொருளாதார ஏணிப்படி என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், புதுமைப் பெண் திட்டத்திற்கென மறுசீரமைக்கப்பட்ட வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் பதிவு செய்யலாம், குறையேதும் இருப்பின் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது விண்ணப்பிக்க முடியாது என்கிற அறிவிப்பு ஆங்கிலத்தில் வலைதளத்தில் காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி இத்தனை மகத்தான திட்டம் குறித்து ஆங்கிலத்தில் ஒரே ஒரு பத்தி எழுதப்பட்டிருக்கிறது. திட்டத்தின் தொலைநோக்கு பார்வை குறித்த விளக்கம் தமிழில் பதிவேற்றப்படாமல் இருத்தல் வருந்தத்தக்கது. இவற்றையெல்லாம் உடனடியாக தமிழக அரசு சீர்படுத்த வேண்டும்.