

தமிழகத்தின் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளில் 2,096 நபர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100-க்கும் அதிகமானோர் இழைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான சிறைவாசம் உள்ளிட்ட கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை.
காரணம், முன்பின் அறியாத அந்நியர்களைவிடவும் நெருங்கிய உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அரசால் முன்னெடுக்கப்பட்டாலும் துரதிருஷ்டவசமாக தங்களது வீட்டுக்குள்ளேயே குழந்தைகளுக்கான அபாயம் சில நேரம் சூழ்ந்துவிடுகிறது.
இதிலிருந்து குழந்தைகளை காக்க முதலாவது பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசின் ‘ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் உள்ள 650 பள்ளி மாணவர்களிடம் காவல்துறையினர் இது குறித்து உரையாடியுள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.
அரசின் கடமை இதுவெனில் ஆசிரியர் மற்றும் பெற்றோரின் கடமை யாது? முதலாவதாக, உங்கள் குழந்தையின் குரலுக்குக் காது கொடுங்கள். பாதிக்கப்பட்ட குழந்தைக்குத் தன்னம்பிக்கை ஊட்டுங்கள். பயந்தோ, குடும்ப கவுரவத்துக்கு அஞ்சியோ முடங்கிவிடாமல் துணிந்து குற்றவாளிகள் மீது புகார் கொடுங்கள்.