சீர்திருத்தம் தண்டனை அவசியம்

சீர்திருத்தம் தண்டனை அவசியம்
Updated on
1 min read

சென்னையில் பேருந்துகூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்களுக்கு 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர்வரை செல்லும் பேருந்தை 10-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கடந்த 22-ம் தேதி நிறுத்தினர். பஸ்கூரை மீது ஏறிய மாணவர்கள் முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்ய நேரிட்டது.

போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் மாணவர்கள் இறங்கி தப்பி ஓடிவிட்டனர். அந்த வழியில் சென்றவர்களால் வீடியோ பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட வண்ணாரப்பேட்டை போலீசார் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களில் நால்வரை பிடித்து காவல்துறை துணை கமிஷ்னர் பவன்குமார் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தவறிழைத்த நால்வரும் தொடர்ந்து 7 நாட்கள் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து சீர் செய்ய வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் மூலக்கொத்தளம் தங்க சாலையில் போக்குவரத்து சீர் செய்து வருகின்றனர் தண்டனை பெற்ற மாணவர்கள்.

இந்த தண்டனை அந்த நால்வருக்கு மட்டுமல்ல அனைவருக்குமான பாடமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மாணவப்பருவத்தில் கட்டுக்கடங்காத ஆற்றல் இருப்பது இயல்பே. அதற்காக நமக்கும் அடுத்தவருக்கும் ஆபத்து விளைவிக்கும் காரியங்களில் ஒருபோதும் ஈடுபடக் கூடாது.

இந்த சம்பவத்தில் தவறிழைத்த மாணவர்களுக்குச் சிறை தண்டனையோ, அபராதமோ விதிக்காமல் போக்குவரத்தை சீர் செய்யும் தண்டனை விதித்தது நிச்சயம் சரியான முடிவு. இத்தகைய சீர்திருத்தும் நடவடிக்கைகள் மட்டுமே மனமாற்றம் ஏற்பட உதவும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in