புதுமை பெண் பாரதி

புதுமை பெண் பாரதி
Updated on
1 min read

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டம் நகுலகுட்டம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி எனும் விவசாய கூலிப் பெண் வேதியியல் பாடப்பிரிவில் முனைவர் பட்டம் பெற்று தனக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பாரதி பிளஸ் 2 முடித்தவுடன் தாய்மாமனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டார். விரைவில் தாயானார். புகுந்த வீட்டிலும் வறுமை பிடித்தாட்ட வேறொருவர் நிலத்தில் விவசாய கூலி வேலைக்குச் சென்றார்.

கல்வி மீதான தீராத தாகத்தால் கணவரை சம்மதிக்க வைத்து கல்லூரியில் சேர்ந்தார். விடியற்காலை எழுந்து வீட்டுப்பணிகளைச் செய்து முடித்து மைல்கள் பல நடந்து சென்று பேருந்து பிடித்து தனது கிராமத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலிருந்த கல்லூரியை அடைவதை வழக்கமாக்கினார். அங்கு கண்ணும் கருத்துமாகப் படித்தார். வீடு திரும்பியதும் மீண்டும் விவசாய வேலைக்குச் சென்றார்.

படிப்படியாகப் படித்து வேதியியலில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் வென்றார். பேராசிரியர்களின் ஊக்கத்தால் உயரிய பட்டப்படிப்பான பிஎச்.டி.யும் முடித்துவிட்டார். தானும் பேராசிரியராகி மேலும் பல பெண்கள் உயர்கல்வி பெற தூண்டுகோலாக திகழ்வேன் என்கிறார்.

பாரதி கல்வியில் படைத்திருக்கும் சாதனை அவரை ஆயிரத்தில் ஒருத்தியாக்கி இருக்கிறது. ஏனெனில் இந்தியப் பெண்களின் கல்வி நிலை கடந்த காலத்தை விடவும் உயர்ந்திருந்தாலும் அறிவியல் துறையில் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை இன்றும் ஆண்களை விடவும் பலமடங்கு குறைவு.

சொல்லப்போனால் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறை பேராசிரியர்களில் 13% மட்டுமே பெண்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு. ஆகையால் பாரதி கண்ட புதுமைப்பெண் தான் இந்த பாரதியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in