

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு, ட்ரோன் தொழில்நுட்பம், 5ஜி, சேட்-ஜிபிடி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் குறித்த பாடங்கள் கற்பிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பிடித்தமான தொழில்நுட்ப பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துப் படிக்க இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதிலும் இத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் நிபுணர்களைக் கொண்டு பயிற்றுவிக்க ஏற்பாடு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. அந்த வகையில் சேட்-ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் இன்று அறிவு உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
கணக்கு கேள்விகளுக்கு பதில் கண்டுபிடித்தல், கணினி மொழியை செம்மைப்படுத்துதல், எந்த தலைப்பு கொடுத்தாலும் ஒரு சில நொடிகளில் கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், இசையமைத்தல் போன்ற படைப்பூக்கமிக்க செயல்களை அநாயசமாக செய்துகாட்டும் திறன் பெற்றது இந்தத் தொழில்நுட்பம். அயல்நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தை பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு அன்றாடத்தில் எளிதில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
ஆகையால் நமது அரசு பள்ளி மாணவர்களுக்கும் இத்தகைய அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்ய வேண்டும். அதிலும் பயன்பாட்டாளராக மட்டும் இவற்றை அறிந்து கொள்ளாமல் இத்தகைய தொழில்நுட்பத்தை வடிவமைப்பதற்கான வழிமுறைகளை கற்பிக்க வேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பு சந்தையில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் சமமாக போட்டிப் போட முடியும்.