

பிளஸ் 1-ல் தான் கேட்ட பாடப்பிரிவை பள்ளி தரக்கோரி சென்னையைச் சேர்ந்த மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பெரும்பாக்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 10-ம் வகுப்பில் 377 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார். எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆக கனவு கண்ட அந்த மாணவி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்காக பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வணிகவியலுடன் கூடிய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடப்பிரிவை கேட்டார். ஆனால், நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவருக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை பள்ளி வழங்கியுள்ளது.
தான் விரும்பிய குரூப் கிடைக்காதது மட்டுமல்லாது கொடுக்கப்பட்ட குரூப்பை படிப்பதிலும் மாணவிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகியவர் பாடப்பிரிவு மாற்றி தரக் கோரினார். ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர் மறுத்துவிட்டர். இதனால் விரக்தியடைந்த மாணவி பள்ளி வளாகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மாணவி கேட்ட பாடப்பிரிவை அளிப்பதாக பள்ளி கூறியுள்ளது.
இது கட்டாயம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய சிக்கலாகும். பள்ளியும் கல்லூரியும் மாணவர்களின் கனவை நனவாக்கும் ஏணிப்படிகளாகத் திகழ வேண்டுமே தவிர கடிவாளமாக மாறிவிடக்கூடாது.
அதிலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை மட்டுமே ஆதாரமாக வைத்து கண்மூடித்தனமாகப் பாடப்பிரிவை மாணவர்கள் மீது திணிக்கும் போக்கை இனியேனும் பெற்றோரும் ஆசிரியர்களும் கைவிட வேண்டும். தனக்கான துறையைத் தனது திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மாணவர்களுக்குக் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.