

அரசு பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி உருவாக்க வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கும்படி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி சேர்க்கையானது தற்போது ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக நடத்தப்படுகிறது. இதற்கு பெரும்பாலான கல்லூரிகள் மாணவர்களின் மின்னஞ்சல் முகவரியை பெறுகின்றன. ஆகையால் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி அவசியமாகிறது.
இதன் பொருட்டு அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இ-மெயில் முகவரி தொடங்க ஆசிரியர்கள் உதவும்படி அரசு அறிவுறுத்தியிருப்பது கவனத்துக்குரியது.
இன்றைய தேதியில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யும் இடத்துக்கு நாடு முன்னேறிவிட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தங்களை மாணவர்கள் தகவமைத்துக் கொள்வது அத்தியாவசியமாகிறது.
இதில் இ-மெயில் முகவரி உருவாக்குதல் என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே. இதனை அடுத்து, இ-மெயிலை எவ்வாறு ஆங்கிலம் மற்றும் தமிழில் தயாரிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
இதுநாள்வரை பள்ளியில் விடுப்புக்குரிய மடலை மட்டுமே எழுதி மாணவர்கள் பழக்கப்பட்டிருப்பார்கள். அடுத்ததாக உயர்கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுக்கு ஏற்றார்போல எவ்வாறு இ-மெயில் தீட்ட வேண்டும் என்கிற புரிதல் தேவை. குறிப்பாக தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து கொச்சையாக எழுதாமல் முறையாக தொழிற்முறை சார்ந்து இ-மெயில் வரைய தேவையான அடிப்படை நெறிமுறைகள் கற்பிக்கப்பட வேண்டும்.
இதுபோக ஒவ்வொரு மாணவரும் தனது கல்வி விவரம், தனித்திறன் குறித்த தகவல்கள், படிப்பை தாண்டி தான்படைத்த சாதனைகள், தனது கனவு, இலக்கு யாது என்பவற்றை உள்ளடக்கிய ‘ரெஸ்யூமே’ உருவாக்க அவசியமான வழி காட்டுதலும் ஊக்கமும் அளிக்கப்பட வேண்டும்.