

சென்னை பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியபோது அமைச்சர் மா.சுப்பிரமணியன் இவ்வாறு பேசியுள்ளார். ஒரு காலத்தில் கார்ப்பரேஷன் பள்ளி என்றும் மாநகராட்சி பள்ளி என்றும் ஏளனமாகப் பார்க்கப்பட்டவை இன்று தரம் உயர்த்தப்பட்டு வருவது நிச்சயம் பாராட்டுக்குரியது. இப்பள்ளிகள் வளர்ச்சி அடைந்து வருவதன் அடையாளமாகத்தான் சென்னை பள்ளிகள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
90களில்கூட சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி அடைய முடிந்தது. பிளஸ் 2 வகுப்பின் தேர்ச்சி விகிதமானது 55 சதவீதமாக மட்டுமே இருந்தது. அந்த நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களில் 86.86 சதவீதத்தினர் தேர்ச்சி அடையும் உயர்த்தை எட்டியுள்ளனர்.
அதிலும் 71 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இது சாத்தியப்பட, இப்பள்ளிகளின் நூலகம், கணினி மற்றும் அறிவியல் சோதனை கூடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுக்கு தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவது முக்கியக் காரணமாகும். இதுபோக உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களை சாதிக்கத் தூண்டும் ஆசிரியர்களுக்கும் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.