

சட்டம் படிக்கும் மாணவர்களுக்கும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு சட்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு சட்ட நுணுக்கங்கள் குறித்த வழிகாட்டல் இலவசமாக வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் நினைவாக, ‘சத்தியதேவ் லா அகாடமி’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்ட நிபுணர்கள் மற்றும் சட்ட ஆசிரியர்களை கொண்டு சிறப்பு காணொலிகள் தயாரிக்கப்பட்டு யூடியூபில் பதிவேற்றப்படும்.
அவற்றை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து படித்து சட்ட கல்லூரி மாணவர்கள் பயன் பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களை வேலைவாய்ப்பு சந்தையில் தகுதி படைத்தவர்களாக மாற்றும் நோக்கில் ‘நான் முதல்வன்’ திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது.
பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருந்தகத் துறை மற்றும் மருத்துவ அறிவியல் ஆகிய துறைகளின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப இத்திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுக் கடந்த ஓராண்டில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 258 தமிழக கல்லூரி மாணவர்களுக்கு உயரிய ஊதியத்துடன் கூடிய பணி கிடைத்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் வேலையில்லா திண்டாட்டம் நிலவியது ஒரு காலம். இன்றோ, வேலைக்குரிய திறன்கள் பட்டதாரிகள் பலரிடம் இல்லை.
இவ்விரண்டுக்கும் தீர்வு காண, தமிழக அரசு முன்னெடுத்திருக்கும் ’நான் முதல்வன்’ திட்டம் இனி சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் பலன் தரும் என்பதால் பள்ளி நாட்களிலிருந்தே சட்ட படிப்புக்கும் குறிவையுங்கள் மாணவர்களே.