

மதுரை நத்தம் சாலையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் நாளை திறக்கப்பட உள்ளது. குழந்தைகள் புத்தக பிரிவு , முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் நூல்கள் கொண்ட பிரிவு, தமிழ் இலக்கிய பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, போட்டித் தேர்வர்களுக்கு வழிகாட்டும் 30 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. உயர் அதிகாரியாக உருவெடுக்கும் ஆசையோடு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் கனவை நனவாக்க இந்த பிரிவு நிச்சயம் கை கொடுக்கும்.
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் செயல்பட்டுவரும் நூலகங்களில் போட்டித்தேர்வாளர்களுக்கான பிரிவில் எப்போதுமே வாசிப்பாளர்களின் வருகை அதிகம். அந்த வகையில் கலைஞர் நூலகத்திலும் இந்த பிரிவை மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வர் என்பதில் ஐயமில்லை. இதையும் தாண்டி அனைத்து பிரிவுகளிலும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிசிறந்த நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும்.
உதாரணத்துக்கு, கலைஞர் நூலகத்தில் அரிய நூல்கள் பிரிவில் 1918-ல் வெளிவந்த ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழ்களும், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50-க்கும் மேற்பட்ட இதழ்களும் இடம்பெற்றுள்ளன. 1824-ல் வெளிவந்த சதுரகராதியின் முதல் பதிப்பு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தை அடுத்து இங்கு இடம்பெற்றுள்ளது.
இத்தகைய அரிய சேகரிப்புகளை தங்கள் விருப்பம் போல் தேடிக் கண்டெடுத்து வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் வாசிப்பின் வாசத்தை மாணவர்களுக்கு ஊட்ட வேண்டும்.