

நாளை விண்ணில் பாய்ந்து நிலவில் தடம் பதிக்கவிருக்கும் ‘சந்திரயான்-3’ விண்கல திட்டத்தின் பின்னணியில் அதன் முதுகெலும்பாகச் செயல்பட்டு வருபவர் தமிழக விஞ்ஞானி வீரமுத்துவேல்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது இஸ்ரோவின் லட்சிய கனவு திட்டமாகும். ஏற்கெனவே சந்திரயான் 1, 2 விண்கலங்கள் இந்த இலக்குடன் விண்ணில் செலுத்தப்பட்டன.
சந்திரயான் 1-க்கு திட்ட இயக்குநராக பொள்ளாச்சியை சேர்ந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டிருந்தார். முன்னாள் குடியரசுத் தலைவரும் மூத்த விஞ்ஞானியுமான அப்துல் கலாமை அடுத்து மாணவர்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர் இவர்.
அவரை அடுத்து சந்திரயான் 2-க்கு சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா திட்ட இயக்குநராக செயல்பட்டார். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையும் இவரையே சேரும். அந்த வரிசையில் தற்போது சந்திரயான் - 3 திட்டத்தின் தலைவராகவும், நிலவு பயணத்தின் திட்ட இயக்குநராகவும் செயலாற்றி வருபவர் விஞ்ஞானி வீரமுத்துவேல். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சென்னை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர்.
கடின உழைப்பும், விடாமுயற்சியும் இவர்களை இத்தனை உயரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இவற்றுடன் இவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது தொலைநோக்கு பார்வையாகும். இருக்கும் இடத்தில் முன்னணி வகிக்க உழைப்பும் முயற்சியும் கை கொடுக்கும். அதுவே அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ஒட்டுமொத்த தேசத்தையும் உந்தித்தள்ள எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வை முக்கியம்.